Saturday, September 21, 2024

மோகன்லாலின் ‘மரைக்காயர்’ பட தயாரிப்பாளரின் கில்லாடித்தனம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கும் ‘அரபிக் கடலிண்டே மரைக்காயர்’ திரைப்படம் ஓடிடியில்தான் வெளியாகும்…” என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளரான ‘ஆஷீர்வாத் சினிமாஸ்’ அந்தோணி பெரும்பாவூர் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தைத் திரையரங்குகளில் திரையிடுவது குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் அந்தோணி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால் பேச்சுவார்த்தை விவரங்களை அவர் வெளியிடவில்லை.

இருந்தாலும் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் பேசியபோது தெரிய வந்தது இதுதான் :

‘மரைக்காயர்’ படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதற்காக விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களிடத்தில் இருந்து 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே 20 கோடி ரூபாயை முன் பணமாக அந்தோணி பெரும்பாவூர் பெற்றிருக்கிறார். இந்த 20 கோடி ரூபாய்க்கு கடன் வாங்கியவர்கள் இப்போதுவரையிலும் வட்டிக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் கொரோனா காலம் கடந்து தியேட்டர்கள் இப்போதைக்குத் திறக்கப்பட்டாலும் பல ஊர்களில் வெள்ளமும், மழையும் சூழ்ந்திருப்பதால் தியேட்டர் வசூல் அந்த அளவுக்கு வராது என்று நினைத்து அந்தோணி தியேட்டர்களுக்கு படத்தைக் கொண்டு வர தயங்குகிறார்.

இதனால் வேண்டுமென்றே கூடுதல் தொகை கேட்டு அடம் பிடித்தாராம். தியேட்டர்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இன்னமும் கூடுதலாக 30 கோடியைக் கொடுத்தால்தான் தியேட்டருக்கு படங்களைக் கொடுப்பேன் என்று சொல்லியிருக்கிறார் அந்தோணி.

ஆனால், தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. மாறாக 15 கோடி அளவுக்குத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதற்கு அந்தோணி இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

ஏனெனில் இந்தப் படத்திற்கு அமேஸான் 50 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கக் காத்திருக்கிறது. ஓடிடியிலேயே படம் வெளியானால்தான் இந்தத் தொகை என்பதால் அலுங்காமல், குலுங்காமல் கிடைக்கும் இந்த 50 கோடி ரூபாயைப் பெற்றுக் கொண்டு கணக்கை முடிக்கலாம் என்பது அந்தோணியின் எண்ணம். இதனால்தான் வேண்டுமென்றே கூடுதல் தொகை கேட்டு அவர் பிரச்சினை செய்வதாக விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் சொல்கிறார்கள்.

“இப்போது நான் இந்த அமேஸான் ஆபரை புறக்கணித்துவிட்டு உங்களிடம் வந்தால் நீங்கள் எனக்கு 60 கோடியை அவுட் ரேட் முறையில் தர வேண்டும். கொடுத்தால் இந்தப் படத்தைத் தியேட்டருக்கு கொண்டு வருகிறேன்…” என்று சொல்லியிருக்கிறார் அந்தோணி.

அவுட்ரேட் முறை என்றால் படம் தோல்வியடைந்தால் தயாரிப்பாளரிடம் நஷ்ட ஈடு கேட்கவே முடியாது. இதனால் நிச்சயமாக அந்தோணி மட்டுமே தப்பித்துக் கொள்வார்.

ஆனால் விநியோகஸ்தர்களோ 500 தியேட்டர்களுக்கு 15 கோடி ரூபாயை அட்வான்ஸாக மட்டுமே தர முடியும் என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார்கள். “அப்போ நான் ஓடிடிக்கே போய்க் கொள்கிறேன்” என்று அந்தோணியும் உறுதியாகச் சொல்லிவிட்டாராம்.

ஆனாலும் கடைசியில் அந்தோணி சொல்லும் சமாதானம் என்னவெனில், “என்னுடைய மரைக்காயர் படத்தின் மொத்த மதிப்பு 65 கோடிகள். நான் இதை அமேஸான் நிறுவனத்திற்கும், ஏசியாநெட்டுக்கும் 7 கோடி ரூபாய் நஷ்டத்தில்தான் கொடுத்துள்ளேன்.. அந்த நஷ்டத்தைக்கூட நான் தங்கிக் கொண்டதற்கு ஒரே காரணம் நான் லாலேட்டனின் ரசிகன் என்பதால்தான்..” என்று சொல்கிறார்.

இதே சமயம் மோகன்லால் நடிப்பில் மேலும் 3 படங்களை அந்தோணி அமேஸானுக்காக தயாரித்து விற்க இருக்கிறாராம். இதன் மதிப்பு 20 கோடிகளாம். ஆனால் இந்தப் படத்தில் டிஜிட்டல் உரிமை, டிவி உரிமை, டப்பிங், ரீமேக் உரிமைகள் அனைத்தும் அந்தோணியிடமே இருக்குமாம்.

பாவம் அந்த விநியோகஸ்தர்கள்.. 2 வருடங்களுக்கு முன்பாக வட்டிக்கு வாங்கிக் கொடுத்த அந்த 20 கோடி ரூபாய்க்கு தற்போது வட்டி கட்டியே ஓய்ந்துவிட்டார்கள்.

அந்தோணி படத்தை ஓடிடிக்குத் தரப் போவதாகச் சொல்லிவிட்டதால் இந்த 20 கோடி ரூபாய்க்கு அவர்கள் கட்டிய வட்டியெல்லாம் அவர்களுக்கு நஷ்டம்தான்..!

இது குறித்து மோகன்லாலிடம் தியேட்டர்காரர்கள் புகார் சொன்னபோது அவரோ, “ஆசீர்வாத் சினிமாஸ்ல நான் பங்குதாரர் இல்லை. வெறும் நடிகர் மட்டுமே. ஒரு தயாரிப்பாளரா தன்னைக் காப்பாத்திக்க அந்தோணி செய்யும் முயற்சிகளை நான் தடுக்க முடியாது…” என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டாராம்.

ஆக, கேரளாவின் தியேட்டர்களை இந்தத் தீபாவளிக்குக் காப்பாற்றப் போவது ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் மட்டும்தான்..!

கடைசி செய்தியாக அந்தோணி கேரள மாநில தியேட்டர் அதிபர்கள் கூட்டுக் குழுவின் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகிவிட்டாராம்..!

- Advertisement -

Read more

Local News