திரையில் எதிரும் புதிருமாக நடித்த எம்.ஜி.ஆரும், நம்பியாரும் நெருங்கிய நண்பர்கள்.
‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். படம் சூப்பர் ஹிட். இதற்கான வெற்றி விழாவில், படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
சக கலைஞர்கள் பேசி முடித்தபின் கடைசியாக எம்.ஜி.ஆர். பேசவந்தார். அவரது பேச்சு மக்களுக்குத் தெளிவாகக் கேட்பதற்காக ஏற்கெனவே இருந்த ‘மைக்’குடன் கூடுதலாக இன்னொரு ‘மைக்’ வைக்கப்பட்டது. மேடையில் நாற்காலியில் அமர்ந்திருந்த நம்பியார், ‘மைக்’ அருகே வந்தார்.
‘‘இது அநியாயம்… நாங்கள் பேசும்போது ஒரு ‘மைக்’தான் வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் பேசுவதற்கு மட்டும் இரண்டு ‘மைக்’குகளா?’’ என்று நகைச்சுவையுடன் நம்பியார் கேட்க.. கூட்டத்தில் சிரிப்பலை.
உடனே எம்.ஜி.ஆர்., ‘‘படத்தில் எனக்கு இரட்டை வேடம். அதனால்தான், இரண்டு‘மைக்’குகள்’’ என்று சிரித்தபடி பதிலளிக்க, கூட்டத்துடன் சேர்ந்து நம்பியாரும் ஆரவாரம் செய்தார்.
இந்த அளவுக்கு நெருக்கமாக இருந்த எம்.ஜி.ஆர் குறித்து, ‘எம்.ஜி.ஆர். எனக்குத் துரோகம் செய்து விட்டார்’ என்று ஒரு வார இதழில் பேட்டி கொடுத்தார் நம்பியார்.
பெரிய பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்தப் பேட்டியில், ‘‘எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தவரை கதாநாயகனாக இளைஞராக நடித்தார். அவருக்கு வில்லனாக நானும் இளைஞராக நடித்தேன். அவர் திரையுலகை விட்டு விலகியபின், இப்போது மாமா, அப்பா, தாத்தா போன்ற வயதான பாத்திரங்களில் நரைத்த தலையுடன் நடிக்க வேண்டியிருக்கிறது. என்னை கிழவனாக்கி தவிக்க விட்டு அவர் அரசியலுக்குப் போய்விட்டார். இதுதான் அவர் எனக்கு செய்த துரோகம்’’ என்று நகைச்சுவையாக கூறியிருந்தார் நம்பியார்.