குழந்தையைக் காப்பாற்ற எம்ஜிஆர். செய்த ஐடியா…!

திரையிலகிலும், அரசியலிலும் எம்.ஜி.ஆரின் மதி நுட்பம் வெளிப்பட்டதை அனைவரும் அறிவர். சிறு வயதில் இருந்தே அவர் அப்படித்தான்.

எம்ஜிஆருக்கு 20 வயது இருக்கும் போது நடந்த சம்பவம் இது. ஒரு நாள் தூங்கிக்கொண்டு இருந்தார். பெண்களின் கூக்குரல் அவரைத் தட்டி எழுப்பியது. எழுந்து பார்த்தால் அதிர்ச்சி. அண்ணனின் குழந்தை கதவிடுக்கில் விரல்களை விட்டுக்கொண்டு எடுக்க முடியாமல் கதறி அழுதது. அன்னை சத்யா அவசரத்தில் குழந்தையின் கையைப் பிடித்து இழுக்க வலி பொறுக்க முடியாமல் மேலும் கதறியது குழந்தை.

அண்ணியார் தங்கமும் அழுது கொண்டு இருந்தார். பக்கத்து வீட்டுப் பெண்களும் செய்வதறியாது தவித்துக் கொண்டு இருந்தனர்.

ஒரு நொடியில் நிலைமையைப் புரிந்து கொண்டார் எம்ஜிஆர். எல்லோரையும் பார்த்து போங்க அந்தப் பக்கம் என்று அதட்டினார். கூட்டம் விலகியதும் குழந்தையின் அருகில் வந்து அமர்ந்தார்.

கதவை ஒரு நூலிழை அளவு முன்னால் அசைத்தார். வலி தாங்காமல் குழந்தை அழுதது. உடனே ஒரு நூலிழை அளவு பின்னால் அசைத்தார். உடனே வலி நீங்கிக் குழந்தை சித்தப்பாவை ஆறுதலோடு பார்த்தது.

மேலும் ஒரு நூலிழை அளவு பின்னால் அசைத்தார். குழந்தை கைவிரல்களை மெல்ல உருவி வெளியே எடுத்தது.

வெற்றிப்புன்னகையுடன் அனைவரையும் பார்த்து விட்டு உள்ளே போனார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. எம்ஜிஆர் குழந்தை விரல்களை நுழைக்கக் கதவிடுக்கில் இடம் இருந்ததால் தானே நுழைத்துக் கொண்டது? எந்தப் பக்கம் கதவு அசைந்தால் இடைவெளி பெரிதாகிறது? என்று பார்த்தார்.

அப்படி பெரிதாகும்போது விரல்களை எடுத்து விடலாமே என்று அவருக்கு மனதில் நொடிப்பொழுதில் பளிச்சென ஒரு யோசனை பிடிபட்டது. அதுதான் எம்ஜிஆருக்குக் வெற்றியைக் கிடைக்கச் செய்தது.

இந்த சம்பவத்தை எம்.ஜி.ஆரே ஒரு முறை சொல்லி இருக்கிறார்.