1947 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான படம் ராஜகுமாரி. ஜூப்பிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கினார். இதில், மாலதி, டி.எஸ்.பாலைய்யா, தவமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
இதுதான் நடிகை மாலதி கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம்.
படப்பிடிப்பின்போது இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமி, நடிகை மாலதியிடம் “அம்மா, உங்க முகத்தை இந்த பக்கம் நல்லா திருப்பி பாருங்கம்மா” என சொன்னார். உடனே மாலதியின் முகத்தில் அனல் பறந்தது. ஏ.எஸ்.ஏ.சாமிக்கு ஒன்றும் புரியவில்லை.
இதனால் படப்பிடிப்பில் மற்ற நடிகர்களும் மனம் ஒன்றி நடிக்க முடியவில்லை. காட்சிகளை மீண்டும் மீண்டும் எடுக்க வேண்டிய நிலை.
மாலதியிடம் கேட்டால், பதிலே இல்லை. இல்லை. ஆகவே, அவரது கணவரிடம், “உங்கள் மனைவி ஏன் கோபமாகவே இருக்கிறார். அவரை இயக்குவதற்கே கொஞ்சம் கடினமாக இருக்கிறது” என வருத்தப்பட்டு இருக்கிறார்.
அதன் பின் மாலதியிடம் இந்த விஷயத்தை கேட்டுத் தெரிந்துகொண்ட கணவர், ஏ.எஸ்.ஏ.சாமியிடம் வந்து “நீங்க மாலதியை அம்மா அம்மான்னு கூப்புடுறீங்களாம். அது வயதானவர்களை கூப்பிடுவது போல இருக்கிறது.. அதுதான் பிரச்சினை” என கூறியிருக்கிறார்.
ஏ.எஸ்.ஏ.சாமி “இவ்வளவுதான் விஷயமா?” என்று சிரித்துவிட்டு பிறகு மாலதி என்று அழைக்க ஆரம்பித்தாராம்.
ஒரு சிறிய விசயம், படப்பிடிப்பில் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்பது எவ்வளவு உண்மை!