50,60,70 களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் காதல், தத்துவம், சோகம் என பல சூழ்நிலைகளும் பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.
தி.மு.க.வில் இருந்த கண்ணதாசன், ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க ஆரம்பித்தார். அப்போது தி.மு.க.வில் இருந்த எம்.ஜி.ஆரை பல முறை கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் கோபமடைந்த எம்.ஜி.ஆர் கண்ணதாசனை தனது படங்களில் பாடல் எழுத வைப்பதை நிறுத்திவிட்டு கவிஞர் வாலி பக்கம் சென்றார்.
பிறகு திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் விலகி அதிமுக எனும் புதிய கட்சியை துவங்கி முதல்வர் பதவியிலும் அமர்ந்தார். அப்போது அரசவை கவிஞராக கண்ணதாசனை நியமித்தார்.
அரசியல்ரீதியாக கருத்து வேறுபாடு இருந்தாலும் கண்ணதாசனின் தமிழ் மீதும், அவரின் திறமை மீதும் அன்பும், மரியாதையும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.
இந்த நிலையில் கண்ணதாசன், ‘எம்.ஜி.ஆர் என்னை செருப்பால் அடித்துவிட்டார். அவரை அவ்வளவு விமர்சித்து பேசியிருக்கிறேன். ஆனால், அரசவை கவிஞராக என்னை நியமித்துள்ளார். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். எம்.ஜி.ஆர் உயிரோடு இருக்கும்வரை அவர்தான் முதல்வராக இருப்பார்’ என உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
இந்த தகவலை கண்ணதாசனின் மகள் விசாலி கண்ணதாசனே ஒரு மேடையில் பேசியிருக்கிறார்.