மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – அதிதி சங்கர் ஜோடியாக நடிக்கும் மாவீரன் திரைப்படம், நாளை திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன், சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘படத்தில் வில்லனாக நடித்துள்ள மிஸ்கின் வரக்கூடிய காட்சிகளில் எங்களது கட்சியின் சிகப்பு – வெள்ளை – சிகப்பு வண்ண கொடியும், அக்காட்சியில் கட்சியினர் அணியும் வேட்டியில் எங்கள் கட்சி வண்ணம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, அந்த காட்சிகளை நீக்கும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.
பட தயாரிப்பாளர் தரப்பு வழக்கறிஞர், “காட்சிகளை முழுமையாக மாற்ற 10 முதல் 20 நாட்கள் கால அவகாசம் தேவைப்படும். இந்த திரைப்படம் வெள்ளிக்கிழமை 750க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஒருவேளை படம் வெளியாகாவிட்டால், பெருத்த நஷ்டம் ஏற்படும்” என்று வாதிட்டார்.
பிறகு நீதிபதி, “படத்தின் துவக்கம், இடைவேளை மற்றும் இறுதியில், ‘எந்த அரசியல் கட்சியையும் குறிப்படவில்லை’ என பொறுப்புத் துறப்பை வெளியிட வேண்டும்” என உத்தரவிட்டார்.
அதேசமயம், ஓடிடி மற்றும் சாட்டிலைட் சேனலில் வெளியிடும் போது, குறிப்பிட்ட வண்ண கொடி, வேட்டி இருக்கக்கூடாது என தடை விதித்தார்.