அறிவுரைகள் என்பது எல்லோரும் சொல்வதுதான். ஆனால் சொன்னவர் – சொல்லப்பட்ட சூழ்நிலையை ஆகியவற்றைப் பொறுத்து கவனம் பெறும்.
அப்படித்தான், சமீபத்தில் மறைந்த மனோபாலா கூறிய ஒரு அறிவுரை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து இருக்கிறது.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்பதோடு நகைச்சுவை நடிப்பிலும் கவர்ந்தவர் அவர். உடல் நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை தொடரும்போதே மரணமடைந்தார்.
இந்தநிலையில் அவரது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர், “என்னுடைய உடம்பு பாதிகஆனதற்கு காரணமே சிகரெட் பழக்கம்தான். நான் இயக்குனராக பெரிய உச்சத்தில் இருந்தபோது ஒரு நாளைக்கு 200 சிகரெட் குடிப்பேன். இதைப் பார்த்து பலரும் என்னை கண்டித்து இருக்கிறார்கள். ஆனால் அப்பொழுதெல்லாம் நான் அவர்கள் சொல்வதை பொருட்படுத்தவே மாட்டேன்.
ஒரு கட்டத்தில் உடல்நிலை மோசமான பிறகு இந்தி பட நடிகை ரேகா, நான் குடிக்கும் சிகரெட் சாம்பலை ஒரு பாக்கெட்டில் போட்டு அதை கட்டி தொங்கவிட்டு ‘நீ எவ்வளவு குடிக்கிறாய் என்று இதை வைத்தே புரிந்து கொள். இதுக்கு மேலேயும் நீ தொடர்ந்து இதே மாதிரி செய்தால் உன்னுடைய நிலைமை எப்படி இருக்கும் என்று நீயே யோசித்துப் பார்’ என்று எனக்கு அறிவுரை கூறினார்.
அத்துடன் என் உடம்பும் இவ்வளவு ஒல்லியானதற்கு காரணம் அந்த சிகரெட் தான். பிறகு என்னுடைய உடம்பை பார்த்து எனக்கே மிக வேதனையை கொடுத்தது. அந்த அளவுக்கு எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று சொல்லும் அளவிற்கு மாறிவிட்டேன். அதனால் ஒரு கட்டத்தில் நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டேன். ஆனாலும் நிறுத்திய பிறகும் ஏற்கெனவே சிகரெட்டால் ஏற்பட்ட பாதிப்பால் சிரமப்பட்டேன்.
யாரும் சிகரெட் புகைக்காதீர்கள். என்னைப் போல பட்ட பிறகு புத்தி என்பதற்கு பதிலாக முன்னதாகவே திருந்திவிடுங்கள்” என அந்த வீடியோவில் மனோபாலா கூறியிருக்கிறார்.
இவர் பேசிய வீடியோ இவர் இறந்த பின்பு வைரலாகி வருகிறது. இதை பார்த்து இனிமேலாவது புகைப்பவர்கள் நிறுத்தினால் நல்லது.