வறுமையால் விரட்டப்பட்ட பலருக்கு அந்தக் காலத்தில் அடைக்கலம் கொடுத்தது நாடகக் கம்பெனிகள்தான். எட்டு வயதிலேயே தனது தந்தையைப் பறி கொடுத்த எம்.என்.நம்பியார் நாடகக் கம்பெனியில் சேரவும் அந்த வறுமைதான் காரணமாக அமைந்தது.
தனது பதிமூன்றாவது வயதில் நம்பியார் சேர்ந்த நாடகக் குழு நவாப் ராஜமாணிக்கம் பிள்ளைக்கு சொந்தமானது. அந்த நாடகக் குழுவில் ராஜபார்ட் வேடத்தில் நடிக்கவோ, ஸ்திரி பார்ட் வேடத்தில் நடிக்கவோ நம்பியார் சேரவில்லை. அவருக்குக் கிடைத்தது சமையல் அறையில் உதவி செய்கின்ற வேலை. அந்த வேலை செய்பவர்களுக்கு தங்கும் இடமும், சாப்பாடும் இலவசம். ஆனால், சம்பளம் எதுவும் தர மாட்டார்கள். நடிகர்களுக்கு மட்டும்தான் சம்பளம் என்பதால்தான் நம்பியாருக்கு நடிப்பின் மீதே ஆர்வம் பிறந்தது.
சில வருடங்களுக்குப் பிறகு ராஜமாணிக்கம் கம்பெனியில் சின்னச் சின்ன வேடங்களில் நடிக்கும் வாய்ப்பிணைப் பெற்றார் நம்பியார். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் கம்பெனி நடத்திய நாடகங்களில் அவருக்கு மிகப் பெரிய பெயரை வாங்கித் தந்த நாடகம் ‘பக்த ராமதாஸ்’. அந்தக் கதையை பல நாடகக் குழுக்கள் அப்போது நடத்திக் கொண்டிருந்தன. அதில் பல நடிகர்கள் நவாப் வேடத்தில் நடித்தார்கள்.
ஆனால், அந்த நவாப் வேடம் ராஜமாணிக்கம் பிள்ளைக்குப் போருந்துவதைப் போல வேறு எவருக்கும் பொருந்தவில்லை என்பதே அந்த காலத்து நாடக ரசிகர்களின் ஒருமித்த கருத்தாக இருந்தது. அதனால்தான் ‘சிவாஜி’ என்ற பட்டம் வி.சி.கணேசனுக்கு முன்னாலே இடம் பிடித்ததைப்போல போல ‘நவாப்’ என்ற பட்டம் ராஜமாணிக்கம் பிள்ளையோடு இணைந்து கொண்டது.
1931-ல் தமிழ் சினிமா பேச ஆரம்பித்த பிறகு ‘பரமேஸ்வர் சவுண்ட் பிக்சர்ஸ்’ என்ற பட நிறுவனத்தினர் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நடத்திக் கொண்டிருந்த ‘பக்த ராமதாஸ்’ நாடகத்தைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார்கள்.
மிகுந்த கட்டுப்பாடுகளுடன் ராணுவ முகாம் போல கட்டுக்கோப்புடன் தனது நாடகக் கம்பெனியை நடத்திக் கொண்டிருந்த நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை தனது நாடகத்தில் நடித்துக் கொண்டிருப்பவர்களை வைத்துக் கொண்டே படத்தைத் தயாரிப்பதாக இருந்தால் மட்டுமே நாடகத்தை படமாக்க அனுமதி தர முடியும் என்று அவர்களுக்கு நிபந்தனை விதித்தார். வேறு வழி இல்லை என்பதால் அவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டனர்.
ராஜமாணிக்கம் பிள்ளையில் நாடகக் குழுவில் பெண்களே இல்லை என்பதால் ‘பக்த ராமதாஸ்’ திரைப்படமானபோது சீதை வேடம் உட்பட எல்லா பெண் வேடங்களையும் ஆண்களே ஏற்றார்கள்.
அந்த நாடகக் குழுவில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த நம்பியார் ‘பக்த ராமதாஸ்’ படத்தில் ‘மந்திரி மாதண்ணா’ என்ற வேடத்தில் நடித்தார். அந்தப் படத்தில் நடிக்க அவருக்கு தரப்பட்ட சம்பளம் நாற்பது ரூபாய். அப்போது தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு இரண்டு ரூபாய் எண்பத்தி எட்டு பைசா என்பதை வைத்து கணக்கிட்டுப் பார்க்கும்போது முதல் படத்திலேயே மூன்றரை லட்சம் ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளார் நம்பியார்.
1935-ம் ஆண்டில் வெளியான ‘பக்த ராமதாஸ்’ பெண்கள் இல்லாமல் ஆண்கள் மட்டுமே நடித்த முதல் வெற்றிப் படமாக அமைந்தது.
நம்பியார் நடித்த இரண்டாவது படமாக அமைந்திருக்க வேண்டிய படம் நவாப் ராஜமாணிக்கம் குழுவினர் நாடகமாக நடத்தி வந்த ‘இன்ப சாகரம்’.
அந்த நாடகத்தைப் படமாக்குகின்ற உரிமையை நவாப் ராஜமாணிக்கத்திடமிருந்து வாங்கி படமாக எடுத்துக் கொண்டிருந்தவர் தமிழ்ப் படவுலகின் பீஷ்மர் என்று அந்தக் காலத்தில் போற்றப்பட்ட இயக்குநரான கே.சுப்ரமணியம். அந்தப் படத்தில் நம்பியாருக்கு முக்கியமான ஒரு பாத்திரம் தரப்பட்டிருந்தது.
இப்போது அண்ணா சாலை மேம்பாலத்துக்கு அருகே பார்சன் காம்ப்ளெக்ஸ் அமைந்துள்ள இடத்தில் முதலில் கே.சுப்ரமணியத்துக்கு சொந்தமான “மூவிலேண்ட்” என்ற ஸ்டுடியோ இருந்தது. அங்கேதான் ‘இன்ப சாகரம்’ படம் தயாராகியது. அந்த ஸ்டுடியோவிலே ஏற்பட்ட தீ விபத்தில் அந்தப் படத்தின் நெகடிவ் முழுவதும் எரிந்து சாம்பலாகிவிட்டது.
அதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஏலத்துக்கு வந்த அந்த ஸ்டுடியோவை வாங்கித்தான் பின்னர் ஜெமினி ஸ்டுடியோவை அந்த இடத்திலே நிறுவினார் எஸ்.எஸ்.வாசன்.
‘பக்த ராமதாஸ்’ படத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் மீண்டும் நாடகத்துக்கு திரும்பிய நம்பியார் வாழ்க்கையை நடத்த போதுமான வருமானம் இல்லாமல் திண்டாடினார். அதன் காரணமாக ராணுவத்தில் சேர அவர் முடிவெடுத்த அவர் ராணுவத்தில் சேர்ந்தால் அசைவம் சாப்பிடாமல் இருக்க முடியாது என்று சிலர் கூறவே உடனடியாக அந்த எண்ணத்தைக் கைவிட்டார்.
‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற பல படங்களுக்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமி தன்னுடைய நாடகக் குழுவில் வந்து சேர்ந்து கொள்ளும்படி நம்பியாருக்கு விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டு 1944-ம் ஆண்டு அவரது நாடகக் குழுவில் இணைந்தார் நம்பியார். அந்த முடிவுதான் தமிழ்த் திரையுலகில் நம்பியார் வெற்றி பெறக் காரணமாக அமைந்தது.
சக்தி நாடக சபா நடத்திய ‘கவியின் கனவு’ நாடகத்தில் நம்பியார் ஏற்றிருந்த ராஜகுரு வேடத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அப்போது கோவையில் இருந்த சென்ட்ரல் ஸ்டுடியோவைக் குத்தகைக்கு எடுத்து தொடர்ந்து படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்த ஜுபிடர் சோமு நாகப்பட்டினத்தில் ‘கவியின் கனவு’ நாடகத்தைப் பார்த்தார்.
அந்த நாடகத்தில் நடித்த எஸ்.வி.சுப்பையா, எம்.என்.நம்பியார் ஆகிய இருவரின் நடிப்பும் அவரை மிகவும் கவர்ந்ததால் அவர்கள் இருவரையும் தனது ஜுபிடர் பிக்சர்ஸ் பட நிறுவனத்தில் ஒப்பந்த நடிகர்களாக ஆக்கிக் கொண்டார் அவர்.
‘பக்த ராமதாஸ்’ படத்திற்குப் பிறகு மீண்டும் கேமிராவைப் பார்க்கக் கூடிய வாய்ப்பு 1946-ம் ஆண்டில் ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த ‘வித்யாவதி’ படத்தில்தான் நம்பியாருக்குக் கிடைத்தது.
வடுவூர் கே.துரைசாமி அய்யங்கார் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு ஏ.டி..கிருஷ்ணசாமி திரைக்கதை எழுதி தயாரித்த படம் ‘வித்யாவதி’. அந்தப் படத்தில் எம்.எஸ்.பாக்கியம் என்ற நடிகையுடன் நகைச்சுவை வேடத்தில் நடித்தார் நம்பியார்.
என்.எஸ்.கிருஷ்ணன்-டி.ஏ.மதுரம், காளி.என்.ரத்தினம்-சி.டி.ராஜகாந்தம் ஜோடிகளைப் போல நம்பியார்-பாக்கியம் ஜோடியையும் ஒரு சிறந்த நகைச்சுவை ஜோடிகளாக ஆக்கிவிட முயற்சி செய்தார் ஜுபிடர் சோமு. ஆனால் அவரது முயற்சி பலனளிக்கவில்லை.
அடுத்து நம்பியாரைக் கதாநாயகனுக்கு இணையான ஒரு பாத்திரத்தில் ‘கஞ்சன்’ படத்திலே நடிக்க வைத்தார் அவர். ‘கவியின் கனவு’ நாடகத்தில் நம்பியாரோடு நடித்த எஸ்,வி,சுப்பையா கஞ்சனாக பிரதான பாத்திரத்தில் நடித்த அந்தப் படம் மிகப் பெரிய தோல்விப் படமாக அமைந்தது,
அதையடுத்து எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படமான ‘ராஜகுமாரி’யில் நடிக்கின்ற வாய்ப்பை அவருக்கு வழங்கினார் அந்தப் படத்தின் இயக்குநரான ஏ.எஸ்.ஏ.சாமி.
‘ராஜகுமாரி’தான் எம்.ஜி.ஆரோடு நம்பியார் இணைந்து நடித்த முதல் படம். அந்தப் படத்தில் எம்ஜிஆருடன் நடிக்கத் தொடங்கிய நம்பியார், எம்ஜிஆர் நடித்து வெளியான கடைசி படமான ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’வரை முப்பது ஆண்டுகள் எம்.ஜி.ஆர். படங்களில் தொடர்ந்து இடம் பெற்றார்.
‘ராஜகுமாரி’ படத்தில் நம்பியாரின் வேடம் சிறியதுதான் என்றாலும் மக்கள் மனதில் அந்த வேடம் நிலைத்து நின்றது. அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததால் எல்லோருக்கும் தெரிந்த நடிகரானார் அவர். எம்ஜிஆரின் அடுத்த படமான ‘அபிமன்யு’வில் சகுனியின் வேடத்திலே நடித்திருந்தார் நம்பியார்.
அந்தப் படங்களின் வெற்றி, மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடிக்கும் வாய்ப்பை நம்பியாருக்குப் பெற்றுத் தந்தது. டி.ஆர்.சுந்தரத்திடமிருந்து வந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு மாடர்ன் தியேட்டர்சுக்கு சென்ற நம்பியார் அவரைப் பார்ப்பதற்காக அவரது அறை வாசலில் காத்துக் கொண்டிருந்தபோது வித்தியாசமான ஒரு அனுபவம் அவருக்குக் கிடைத்தது.
டி.ஆர்.சுந்தரம் இருந்த அறைக்குள்ளிருந்து “ஐயோ,அம்மா” என்ற அலறலும், அதைத் தொடர்ந்து ஒருவர் பலமாக அடி வாங்கும் சத்தமும் கேட்கவே அருகிலிருந்த ஸ்டுடியோ ஊழியரிடம் “என்ன நடக்கிறது உள்ளே?” என்று கேட்டார் நம்பியார்.
“இங்கே வேலை செய்யறவங்க யார் தப்பு செய்தாலும் அய்யா தாங்கிக்க மாட்டார். அதுக்குப் பிறகு அடி உதைதான். அதுதான் இப்போ உள்ளே நடக்குது .நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க…” என்றார் அந்த ஊழியர்.
“இங்கே வேலை செய்யறவங்களை மட்டும்தான் அப்படி அடிப்பாரா? இல்லே படங்களில் நடிக்கிறவங்களையும் அடிப்பாரா..?” என்று அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டுவிடலாமா என்று நம்பியார் மனதிற்குள் யோசித்துக் கொண்டிருந்தபோது அதைக் கேட்டவர் போல “எவ்வளவு பெரிய நடிகர்கள் எல்லாம் ஐயாகிட்டே அடி வாங்கி இருக்காங்க தெரியுமா” என்றார் அந்த ஆள்.
அதைக் கேட்ட பிறகு மெல்ல எழுந்து வெளியே கிளம்ப நம்பியார் தயாரானபோது சுந்தரத்திடமிருந்து அழைப்பு வந்தது. நம்பியார் அதுவரை வாங்காத ஒரு பெரிய தொகையை சம்பளமாகக் கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்தார் டி.ஆர்.சுந்தரம். அன்று மட்டும் நம்பியார் சுந்தரத்தை சந்திக்காமல் சென்றிருந்தார் என்றால் அவரது வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய படமான ‘மந்திரி குமாரி’ படத்தில் நடிக்கின்ற வாய்ப்பை அவர் இழந்திருப்பார்.
‘மந்திரி குமாரி’ படத்தில் ராஜகுருவின் பாத்திரத்தை ஏற்ற நம்பியார் தன்னுடைய நடிப்புத் திறனால் அந்தப் பாத்திரத்துக்கு மெருகேற்றினார். அன்றைய அரசியல் சூழ்நிலையை மனதில் வைத்துக் கொண்டு கலைஞர் மு.கருணாநிதி எழுதியிருந்த வசனங்கள் அந்தப் பாத்திரத்தை எல்லோரும் ரசிக்க முக்கியமான காரணமாக அமைந்தன .
‘மந்திரிகுமாரி’ படத்திற்குப் பிறகு எண்ணற்ற பட வாய்ப்புகள் நம்பியாரைத் தேடி வரத் தொடங்கின. ‘மந்திரிகுமாரி’ படத்தைத் தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த எம்ஜிஆரின் இருபத்தி ஐந்தாவது படமான ‘சர்வாதிகாரி’யில் பிரதான வில்லனாக நடித்தார் நம்பியார்.
வில்லன் வேடத்திலே வித்தியாசமான நடிப்பை வழங்கிய நம்பியாரின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதைப் பார்த்த டி.ஆர்.சுந்தரத்திற்கு அவரை கதாநாயகன் ஆக்கிப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.
நம்பியார் கதாநாயகனாக நடிக்க ‘தி ஸ்நேக் பிட்’ என்ற ஆங்கிலப் படத்தைத் தழுவி ‘கல்யாணி’ என்ற படத்தை தயாரித்தார் அவர். ஜெமினியின் ‘மங்கம்மா சபதம்’, ‘அபூர்வ சகோதரர்கள்’ போன்ற மாபெரும் வெற்றிச் சித்திரங்களை இயக்கிய ஆச்சார்யா அப்படத்தை இயக்கினார்.
எம்.ஜி.ஆருடன் பல படங்களில் ஜோடியாக நடித்த பி.எஸ்.சரோஜா நம்பியாருக்கு ஜோடியாக நடித்த அந்தப் படம் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. அதற்குப் பிறகு தமிழ்ப் படங்களின் நிரந்தர வில்லானாக மாறிய நம்பியார் எண்ணற்ற படங்களில் எம்ஜிஆருக்கு வில்லனாக நடித்தார்.
எம்ஜிஆரின் படங்களில் பானுமதி, அஞ்சலிதேவி, மாதுரிதேவி, பி.எஸ்.சரோஜா, பத்மினி, சரோஜாதேவி, ஜெயலலிதா, ராஜஸ்ரீ, மஞ்சுளா, லதா என்று படத்துக்குப் படம் கதாநாயகிகள் மாறுவார்கள். ஆனால், எப்போதும் மாறாத வில்லனாக நம்பியார் இருந்தார்.
எம்ஜிஆரின் படங்களில் பி.எஸ்.வீரப்பா, எம்.ஆர்.ராதா, மனோகர், அசோகன், எஸ்.வி.ராமதாஸ் என்று பலர் வில்லன் வேடத்தில் நடித்திருந்தாலும் நம்பியாருக்கு மட்டும் தன்னுடைய மனதில் தனி இடம் கொடுத்து வைத்திருந்தார் எம்ஜிஆர்.
எம்.ஜி.ஆருடைய பல படங்களை இயக்கிய இயக்குநர் ப.நீலகண்டன் அவ்ர்களுக்கிடையே இருந்த நட்பை ஒரு முறை சோதித்துப் பார்த்தார்.
(தொடரும்)