Thursday, April 11, 2024

குழலி – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தப் படத்தை முக்குழி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் கே.பி.வேலு, எஸ்.ஜெயராமன், எம்.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

‛காக்கா முட்டை’ படத்தில் சிறுவனாக நடித்த விக்னேஷ் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ஆரா நடித்துள்ளார். மேலும் மஹா, ஷாலினி, செந்தி குமாரி, அலெக்ஸ் மற்றும் பல கிராமத்து மனிதர்களும் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்ட்டான ஜாதிப் பிரச்சினையை மையமாக வைத்தே இந்தப் படமும் உருவாகியுள்ளது.

நீறு பூத்த நெருப்பாக இரண்டு சாதி சனங்களிடையே சண்டையும், சச்சரவும் புகைந்து கொண்டிருக்கும் திண்டுக்கல், சின்னாளப்பட்டி அருகில் இருக்கும் கிராமம் அது. ‘குழலி’ என்ற ஆரா அந்தக் கிராமத்தின் ஆதிக்க சாதி குடும்பத்தைச் சேர்ந்த ப்ளஸ் டூ மாணவி. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த நாயகன் விக்னேஷ், குழலியுடன் சேர்ந்து ஒரே வகுப்பில் படிக்கும் ஒரு விவசாயியின் மகன்.

குழலிக்கும், விக்னேஷூக்கும் சிறு வயதில் இருந்தே ஒரு ஈர்ப்பு. இப்போது அது காதலாக உருமாறியிருக்கிறது. காதல் மயமாக ஆடிப் பாடுகிறார்கள். விஷயம் ஊருக்குத் தெரிய வர.. இரண்டு குடும்பத்திற்குள்ளும் பிரச்சினைகள் வெடிக்கிறது.

அடுத்து சாதி பிரிவினை பேச்செழுந்து ஊர்ப் பிரச்சினையாகவும் மாறுகிறது. இருவருமே சிறப்பாக படிப்பவர்கள் என்பதால் பள்ளியில் இருந்து கேட்டுக் கொள்ளப்பட்டதால் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள். ஆனால் பேசிக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.

விக்னேஷ் என்ற ஆண் மகனுக்குள் காதல் கொப்பளிக்கிறது. சின்ன வயது என்பதால் எதையும் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. காதலியுடன் பேச முடியாத தருணத்தை நினைத்து ஏங்குகிறான் காதலன். இதனால் காதலியின் மனதையும் மாற்றுகிறான். இருவரும் வீட்டைவிட்டு, ஊரைவிட்டு ஓடிப் போக முயல்கிறார்கள்.

அவர்கள் சொன்னதுபோல் செய்தார்களா..? ஓடிப் போனார்களா..? ஊர்க்காரர்கள் என்ன செய்தார்கள்..? சாதிய பிரச்சினையால் எதுவும் மோதல்கள் வெடித்ததா..? என்பதெல்லாம் படம் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

‘காக்கா முட்டை’யில் பள்ளி செல்லும் சிறுவனாக இருந்த நாயகன் விக்னேஷ், இந்தப் படத்தில் மீசை முளைத்த இளம் வாலிபனாக பிளஸ் டூ படிக்கும் மாணவனாக நடித்திருக்கிறார். அறிமுகக் காட்சியிலேயே தனது நடிப்பார்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் விக்னேஷ்.

தோட்டத்தில் மயங்கி விழும் நாயகியை தன்னுடைய உடலோடு வைத்துக் கட்டிக் கொண்டு வைத்தியரிடம் கொண்டு வந்து சேர்க்கும் காட்சியில் லாஜிக் இல்லையென்றாலும் அந்த வயதுக்குரியவன்.. மனதுக்குள் மானசீகமாகக் காதலிப்பவன்.. என்ன செய்வானோ அதைத்தான் அந்தப் பதட்டத்துடன் செய்திருக்கிறார் விக்னேஷ்.

பின்பு படம் நெடுகிலும் தனது வயதுக்கேற்ற குணத்தையும், நடிப்பையும் காண்பித்து பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார் விக்னேஷ்.

நாயகியும் அப்படித்தான். கேமிராவுக்கேற்ற முகத்துடன் அழகுடன் படம் முழுவதும் பவனி வருகிறார். 18 வயது பெண்ணுக்குள் காதல் என்னும் சவலை நோய் வந்தால் என்னவாகுமோ அதையெல்லாம் திரையில் காட்டியிருக்கிறார் ஆரா. அவரது அப்பாவித்தனமான முகமும், கள்ளமில்லா சிரிப்புமே அவரை கிராமத்து அழகியாகக் காட்டுகிறது.

இந்த குழந்தைத்தனமான முகத்திற்கு திரையுலகத்தில் நல்ல வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் இவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் டப்பிங் வாய்ஸ் கனமான நடுத்தர வயதுப் பெண்ணுக்குரிய குரலாக அமைந்துவிட்டது வருத்தமான விஷயம்தான்.

இவருடைய அம்மாவாக நடித்திருக்கும் செந்தி குமாரி தன்னுடைய அம்மா என்ற கதாபாத்திரத்திற்கேற்ற முழுமையான நடிப்பை வழங்கியிருக்கிறார். தன்னுடைய சொந்த, பந்தம்தான் தனக்கு முக்கியம். அவர்கள்தான் என்னைத் தூக்கிப் போட முன்னால் வருவார்கள் என்று யதார்த்த வாழ்க்கை வாழும் அம்மாவாக நம் மனதைத் தொடுகிறார்.

நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் அலெக்ஸ், இதற்கு நேர்மாறாக அமைதியான பேச்சாலேயே எதையும் சமாளிக்கும் அப்பாவாக நடித்திருக்கிறார். மேலும் படத்தில் ஊர்க்காரர்களாக நடித்தவர்கள் அனைவருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். எதுவும் குறையில்லை.

விக்னேஷின் நெருங்கிய நண்பனாக நடித்திருப்பவர் வீட்டில் செய்யும் அலம்பல்களும், தெருவில் இருக்கும் கிழவிகளை வைத்து செய்யும் தமாஷ்களும் ரசிக்கக் கூடியவை. இதேபோல் மாற்றுத் திறனாளி மாணவ நண்பனும் சிறப்பாக நடித்திகுக்கிறார்.

படத்தின் ஹீரோ கதைதான் என்றாலும் அதையும் தாண்டி தங்களை நிரூபித்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் சமீரும், இசையமைப்பாளர் உதயகுமாரும்.

அந்தக் கிராமத்தின் செழிப்பான வயல் வெளிகள், நாகரீகம் ஒண்டி விடாத வீடுகள்.. வாய்க்கால் வரப்புகள், செம்மண் கலந்த சாலைகள்.. அந்த மண்ணின் மணம் வீசும் சுற்றுப்புறங்கள் என்று காட்சிக்குக் காட்சி கண்களுக்குள் குளுமையைத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

பாடல் காட்சிகளில்கூட மாண்டேஜ் ஷாட்ஸ்களில் காதலர்களின் குளோஸப் ஷாட்டுகளில் கவிதையைக் கொட்ட வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். பாராட்டுக்கள்.

படத்தில் இடம் பெற்றிருக்கும் 5 பாடல்களுமே கேட்கும் ரகம். இன்னிசை ரகம். இசையமைப்பாளர், இளையராஜாவை குருவாகக் கொண்டவர் போலிருக்கிறது. ‘ஐயோ எனக்குள்ளே’ பாடல் வரிகளும், இசையும் நம்மை மயக்க வைக்கிறது. ‘கல்யாணம் கல்யாணம்’ பாடல் ஆட சொல்கிறது. ‘மேல போறேன்’, ‘அட ஆகாச பூவே’ பாடல்கள் நம்மைக் காதலிக்கவும் சொல்கின்றன. மிக நீண்ட நாட்கள் கழித்து ஒரு திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களுமே அருமையென்றால் அது இந்தப் படத்தில்தான்.

படத்தின் டைட்டிலிலேயே அந்தக் கிராமத்தில் இப்போது நிலவி வரும் சாதிய கட்டுப்பாடுகள் பற்றியும், புகைந்து கொண்டிருக்கும் சாதியப் பிரச்சினைகளையும் வாய்ஸ் ஓவர் மூலமாக இயக்குநர் வெளிப்படுத்தியிருப்பது சுவையான விஷயம்.

சாதிய அடக்கு முறையை வெளிப்படுத்தும் படம் என்றாலும், படத்தில் இதற்கான காரணமாகச் சொல்லப்பட்டிருக்கும் பள்ளிப் பருவக் காதல் ஏற்கக் கூடியதாக இல்லை என்பதால் படமே அந்த இடத்தில் அடிபட்டுப் போகிறது.

படத்திலேயே “படிக்கிற வயசுல உனக்கெதுக்குடி காதல்…?” என்று செந்தி குமாரி கேட்காமல், “சாதிவிட்டு சாதி  காதல், கல்யாணம்ன்னா நம்ம சாதிக்காரங்களுக்கு என்ன பதில் சொல்வது..?” என்றுதான் கேட்கிறார்.

“நான் மருத்துவம் படிக்கப் போகிறேன்..” என்று நாயகி சொல்வதுகூட கிளைமாக்ஸ் காட்சியில்தான். “ஊரைவிட்டு ஓடிப் போய் வேறு எந்த ஊரிலாவது பள்ளியில் சேர்ந்து பிளஸ் டூ வகுப்பை படிக்க முடியுமா..?” – இ்ப்படியொரு கோணத்தில் இயக்குநர் சிந்தித்திருக்க வேண்டும். ஆனால், இயக்குநர் சாதியை மட்டுமே பிரதானமாக எண்ணிக் கொண்டிருந்ததால் இதைக் கவனிக்க மறந்துவிட்டார் போலும்..!

கடைசியாக மருத்துவம் படித்துக் கொண்டிருப்பவனையும் சாதி பதம் பார்ப்பது வலிந்து திணித்த காட்சியாகத்தான் தோன்றுகிறது. அதை பாஸிட்டிவ்வாக மாற்றி, “இவனாவது படித்துப் பட்டம் பெற்று தன் சாதியினரை தலை நிமிர வைக்க வேண்டும்” என்ற ரீதியில் முடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். பார்வையாளர்களிடத்தில் அனுதாபத்தைப் பெற முயற்சிக்கும்வகையில் இந்தக் காட்சியை தலைகீழாக மாற்றியமைத்து நம்மை அதிர்ச்சியாக்கியிருக்கிறார்.

“சாதிகள் இல்லையடி பாப்பா” என்று ஆசிரியை சொல்லிக் கொடுக்க அதை கோரசாக மாணவர்களும் சொல்லிக் கொண்டிருப்பது எத்தனை கேலிக்குரியது என்று கடைசியில் இயக்குநர் காட்சிப்படுத்தியிருப்பது உண்மைதான்.

RATING : 3.5 / 5

- Advertisement -

Read more

Local News