ஜி குரூப் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பிரபஞ்சனின் தயாரிப்பில், எம்.எஸ்.சக்திவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ஒன் வே’.
இதில் கதையின் நாயகனாக பிரபஞ்சன் நடிக்க, கோவை சரளா, ஆரா, அப்துல்லா, சார்லஸ் வினோத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
முத்துக்குமரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அஷ்வின் ஹேமந்த் இசையமைத்துள்ளார். சரண் சண்முகம் படத் தொகுப்பு செய்ய, அபிஷேக் தர்ஷன் சவுண்ட் மிக்ஸ் பணியை கவனித்துள்ளார். கார்த்திக் டிஐ பணியை கவனிக்க, விக்கி சண்டைக்காட்சிகளை வடிமைத்துள்ளார். ஹஸ்வத் சரவணன் பத்திரிகை தொடர்பாளராக பணியாற்றுகிறார்.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று (அக்டோபர் 4) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை குஷ்பு, இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், அகத்தியன், பேரரசு, விஜய்ஸ்ரீஜி, தயாரிப்பாளர் கே.ராஜன், எழுத்தாளர் கரண் கார்கி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “இந்த நல்ல நாளில் இப்படி ஒரு விழா நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நடிகை குஷ்பு இங்கு வந்திருப்பது இந்தப் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
நடிகை குஷ்பு என் படங்களில் நடிக்கும்போது தமிழ் சரியாக பேசாமல் தடுமாறினார். ஆனால், அதை ஒரு சவாலாக எடுத்து சில நாட்களிலேயே தமிழ் கற்றுக் கொண்டு வசனத்தை பிச்சு உதறினார். இப்போது அவர் பேசும் தமிழால் பல மேடைகள் அதிர்கிறது. அப்போது அவருடைய அண்ணன் அப்துல்லா அவருடன் இருப்பார். அப்போதே அவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்திருக்கும் போல.. அதனால்தான் இப்போது அவர் நடிகராக மாறிவிட்டார்.
இந்தப் படத்தில் பாடல்களும், டிரைலரும் மிக நன்றாக இருந்தது. குறிப்பாக பாரதியாரின் பாடலை புதிய வடிவத்தில் கொடுத்தது வரவேற்கும்படி இருப்பதோடு, பாராட்டும்படியும் இருக்கிறது. இசையமைப்பாளர் அஷ்வினுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. பாடல்கள் எழுதியவர்களுக்கும் என் பாராட்டுகள்.
படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்க்கும்போது படத்தில் ஏதோ பெரிய விஷயம் இருப்பது தெரிகிறது, படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்படுகிறது. நிச்சயம் படம் மிகப் பெரிய வெற்றி பெறும்.” என்றார்.