Saturday, September 21, 2024

குருதி ஆட்டம் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கபாடி ஆட்டத்தினால் இரண்டு இளைஞர்களுக்கிடையில் உருவாகும் பகையினால் நடக்கும் போர்தான் இந்த ‘குருதி ஆட்டம்’ படத்தின் மையக் கரு.

‘சக்தி’ என்ற அதர்வா பெற்றோர் இல்லாமல் தனது அக்காவுடன் மதுரையில் வசிக்கிறார். மதுரை அரசு மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை செய்து வருகிறார். அவர் குடியிருக்கும் பகுதியில் இருக்கும் தனது நண்பர்களுடன் சேர்ந்து ‘பாசப் பட்டாளம்’ என்ற கபாடி டீமிலும் இருக்கிறார்.

அதே மதுரையை தனது ரவுடியிஸத்தால் தன் கண்ணசைவில் கட்டுப்படு்த்தி வைத்திருக்கிறார் ‘காந்திமதி’ என்னும் ராதிகா. இவரது அண்ணன் ராதாரவி. ராதாவியின் மகனும், காந்திமதியின் மகனான முத்துப் பாண்டியும் ‘வெட்டுப் புலி’ என்ற கபாடி டீமில் இருக்கிறார்கள்.

ஒரு கபாடி டோர்ணமெண்ட்டில் ‘வெட்டுப் புலி’ கபாடிக் குழுவுக்கும், ‘பாசப் பட்டாளம்’ கபாடி குழுவிற்கும் இறுதியாட்டம் நடக்கிறது. இந்த ஆட்டத்தில் ‘வெட்டுப் புலி’ அணி தோல்வியைத் தழுவ, அது அதர்வாவுக்கும், ராதாரவியின் மகனுக்குமான தனிப்பட்ட மோதலாக வெடிக்கிறது.

இந்த மோதல் படிப்படியாக பழி வாங்கும் படலமாக மாறுகிறது. கஞ்சா வழக்கில் சிறைக்கு செல்கிறார் அதர்வா. திரும்பி வெளியில் வந்த பின்பும் அவரை கொலை செய்ய வெறியோடு அலைகிறார் ராதாரவியின் மகன்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் காந்திமதியின் மகனான முத்துப்பாண்டி அதர்வாவுக்கு கை கொடுக்க.. காந்திமதியையும், முத்துப் பாண்டியையும் வெறுக்கத் துவங்குகிறான் ராதாராவியின் மகன். விளைவு ஒட்டு மொத்தமாக ஒரு பெரிய சம்பவத்தை செய்து முடித்து மதுரைக்கு தானே ராஜாவாக இருக்கலாம் என்று நினைக்கிறான் ராதாரவியின் மகன்.

இந்த நினைப்பு சாத்தியமானதா..? இல்லையா..? அதர்வா தப்பித்தாரா..? இல்லையா..? என்பதுதான் இந்தக் குருதி ஆட்டம்’ படத்தின் குருதி கொட்டும் திரைக்கதை.

அதர்வா ஆக்சன் ஹீரோவாக வெடித்திருக்கிறார் என்றே சொல்லலாம். முதல் பாதியில் காதலுக்காக உருகும் காதலனாகவும், குழந்தை கண்மணிக்காக உருகும் செண்டிமெண்ட்காரனாகவும் நடித்திருப்பவர், இரண்டாம் பாதியில் முழுக்க, முழுக்க ஸ்பைடர்மேனாக உருமாறியிருக்கிறார்.

வழக்கமான காதல் கதை போர்ஷன்தான் இதிலும் என்பதால் காதல் ஸ்பெஷல் எதுவும் இல்லாமல் சாதாரண காதலனாக மட்டுமே நடித்துள்ளார் அதர்வா. ஆக்சனில் மட்டும்தான் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். இதற்குத் தோதான அளவுக்கு ஒளிப்பதிவும் அதர்வாவின் அழகையும், கோபத்தையும், ஆவேசத்தையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறது. ஆனால், இளைஞர்களுக்கே உரித்தான அந்தத் துள்ளல் மட்டும் மிஸ்ஸிங்.

வழக்கமான காதலி கதாபாத்திரத்தில் அனைவருக்காகவும் அழவும், ஆறுதல் சொல்லவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார் ப்ரியா பவானி சங்கர். இருப்பினும் நடிப்பில் குறை வைக்கவில்லை. டூயட்டில் முக அழகைக் காட்டியே சொக்க வைக்கிறார். நடிப்பிலும் தேறியிருக்கிறார் என்றே சொல்லலாம்.

ராதிகா ஆம்பளை போல கெத்தான தாதா தோற்றத்தில் படம் முழுவதும் வந்திருக்கிறார். ஆணுக்கு நிகராக தாதாத்தனத்தை வெளிப்படுத்தியதில் ராதிகாவும் முழுமையாக ஸ்கோர் செய்திருக்கிறார். இறுதிக் காட்சியில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே சண்டைகூட போடுகிறார். இயக்குநரிடம் கேள்வியே கேட்காமல் நடித்திருக்கிறார் போலும்.

ராதாரவி சில காட்சிகள் என்றாலும் வரும் இடங்களிலெல்லாம் கை தட்டலையும், கவன ஈர்ப்பையும் பெறுகிறார். மகனுடன் காரில் வரும்போது அவர் கேட்கும் கேள்விகளும், பேசும் பேச்சுக்களும் அமர்க்களம். தியேட்டரே அதிரும் அளவுக்கு கை தட்டலை அள்ளிவிட்டார் ராதாரவி. அந்த வசனங்களை எழுதிய இயக்குநருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு..!

அமைதியான இளைய தாதாவாக நடித்திருக்கும் கண்ணா ரவி தனது நடிப்பை மென்மையாக  கொடுத்திருக்கிறார். மேலும் வினோத் சாகரும் இன்னொரு பக்கம் சென்டிமெண்ட் காட்சிகளில் முழுமையாக திரையை ஆக்கிரமித்திருக்கிறார். அவருடைய நிலைமை கடைசியில் அந்தோ பாவமாகும்போது, நம்மால் உச்சுக் கொட்டத்தான் முடிகிறது.

மேலும் வாட்சன் சக்கரவர்த்தி, பிரகாஷ் ராகவன், குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள சிறுமி என அனைவரின் நடிப்பும் படத்தின் கதையோட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. “நமக்கு பிடிச்சவங்க ஒரு தப்பு பண்ணிட்டா, அந்த தப்பு முக்கியமா..? இல்லைன்னா நமக்கு பிடிச்சவங்க முக்கியமா..?” என்று அந்த சிறுமி கேட்கும் கேள்வி பார்வையாளர்களையும் உலுக்கிவிட்டது எனலாம்.

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது. சண்டை காட்சிகளை படமாக்கியிருக்கும்விதத்தில்தான் ஒளிப்பதிவாளர் பெரும் பாராட்டைப் பெறுகிறார். படம் நெடுகிலும் மதுரையின் கோடை கால வெப்பத்தை அப்படியே பதிவு செய்திருக்கிறார் போலும். வெப்பம் திரையிலும்  எதிரொலிக்கிறது.

யுவனின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் என்றாலும் பின்னணி இசையில் அடித்து ஆடியிருக்கிறார். சிலரது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்ற பின்னணி இசையை போட்டு அந்தக் கேரக்டருக்கே கெத்து கூட்டியிருக்கிறார் யுவன்.

சண்டைக் காட்சிகளை வடிவமைத்த சண்டை பயிற்சி இயக்குநரான விக்கிக்கு ஒரு ஓ’ போடலாம். அதர்வா அண்ட் முத்துப்பாண்டியை ஒரு பக்கமும், ராதிகாவை இன்னொரு பக்கமும் வில்லன் கோஷ்டி வளைத்து வெட்டும் காட்சியில் படத் தொகுப்பாளரின் கச்சிதமான நறுக்கலில் அந்த கொலைகார பீலிங் அப்படியே நம் கண்ணில் நிழலாடுகிறது. கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் லாஜிக் எல்லை மீறியிருந்தாலும் படமாக்கியவிதத்தினால் எதுவும் சொல்ல முடியவில்லை.

முதல் பாதியில் ராதிகாவின் கெத்தான தாதாயிஸம், ஜெயிலில் நடக்கும் காட்சிகள், கபாடி போட்டி.. தொடர்ந்த பிரியா பவானியின் காதல் காட்சிகள் என்று அனைத்தும் சேர்ந்த கலவையாக போகும் கதை இடைவேளைக்குப் பின்பு முழுக்க, முழுக்க அரிவாள், துப்பாக்கியாக மாறிப் போவதால் சட்டென்று நம்மால் மனம் மாற முடியவில்லை.

மதுரையில் போலீஸே இல்லாதது போலவும், மதுரையை ஆட்டி வைக்கும் தாதா போலவும் ராதிகாவை காட்டியதில் லாஜிக் எல்லை மீறல்  அநியாயத்திற்கு இருக்கிறது. அதிலும் போலீஸையே மருத்துவமனைக்குள் வைத்து துப்பாக்கியால் கொலை செய்வதெல்லாம் தெலுங்கு பட காட்சிகள். நிஜத்திற்கு வெகு தொலைவில் உள்ளது.

இடையிடையே கொளுத்தும் வெயிலில் வாடி வதங்கிய நிலையில், இளைப்பாற ஓடி வந்து வீசும் காற்றாக குழந்தை கண்மணி சம்பந்தப்பட்ட காட்சிகள் இருந்து நம் மனதைத் தொடுகின்றன. இதற்காக புனையப்பட்டிருக்கும் திரைக்கதை, மிகவும் புத்திசாலித்தனமாக அமைக்கப்பட்டிருப்பது என்பதில் சந்தேகமில்லை.

இரண்டாம் பாதியில் வீசப்படும் அரிவாள்களாலும்ம், சொருகப்படும் கத்திகளாலும் ரசிகர்களின் கழுத்தும், வயிறும் சேர்ந்தே அறுபடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த அளவுக்கு கத்திக் குத்துக்களும், அரிவாள் வெட்டுக்களும், துப்பாக்கிச் சூடும் நடந்தேறி நமக்கு கண்ணை கட்டுகின்றன.

முதல் பாதி படத்தைத் தாங்கிப் பிடித்தாலும் இரண்டாம் பாதியில் நீடித்து நிலைத்து நின்று விளையாடிருக்கும் வன்முறை வெறியாட்டமும், அதையொட்டிய குருதி ஆறாக ஓடுவதும், கிளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் குழப்பத்துடன் முடிந்திருப்பதும், சட்டென ஜீரணிக்க முடியாத டிவிஸ்ட்டுகளும் சேர்ந்து இந்தப் படத்தை ‘நம்ம படம்’ என்று சொல்ல முடியாமல் தடுக்கிறது.

நல்ல கதைதான் ஹீரோ என்று நினைத்து தம்பி ஸ்ரீகணேஷ் எடு்த்த முதல் படம் அபார வெற்றி. ஆனால், ஹீரோவுக்காக கதை எழுதி, அவரை ஆக்சன் ஹீரோவாக்க நினைத்து உருவாக்கிய இந்த இரண்டாவது படம், இயக்குநர் ஸ்ரீகணேஷுக்கு என்ன சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்..!

மீண்டும் முதல் படத்தின் பாதைக்குத் திரும்பினால் அது தம்பி ஸ்ரீகணேஷூக்கும் நல்லது. தமிழ்ச் சினிமாவுக்கும் நல்லது..!

RATING : 3.5 / 5

- Advertisement -

Read more

Local News