பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சீரிஸிற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.
இத்தொடரில் நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா.மோகன், சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி, ஜீவா தங்கவேல், மோகன் குமார், தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்கின்றனர். இத்தொடரின் முதல் மற்றும் இரண்டாவது ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. முதல் ட்ரைலரை சூர்யாவும் இரண்டாவது ட்ரைலரை சிவகார்த்திகேயனும் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர்.
இந்த சீரிஸ் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் நாளை (டிசம்பர் 8) முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவிருந்தது. ஆனால் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளதால் வருகிற 14 ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய புது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.