Thursday, April 11, 2024

 ‘கொன்றால் பாவம்’ விமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் அவ்வப்போது கதைக்கு மட்டும் முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளியாகி அதில் சில வரவேற்பும் பல சொதப்பலும் நடக்கும். அந்த வரிசையில் எப்பொழுதும் விஜய் சேதுபதி போல் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களை தைரியமாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் கொன்றால் பாவம் திரைப்படம் சொதப்பியதா? இல்லை வரவேற்பை பெற்றதா?

1980களில் உள்ள ஒரு சிறிய கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் வரலட்சுமி சரத்குமார், சார்லி, ஈஸ்வரி ராவ் ஆகியோரின் ஏழ்மையான குடும்பம் வசித்து வருகிறது. அந்த ஊரில் வழிப்போக்கனாக வரும் சந்தோஷ் பிரதாப் ஓர் இரவு மட்டும் தங்கிக்கொள்ள இவர்கள் குடும்பத்திடம் அனுமதி கேட்கிறார். அவர்களும் சம்மதிக்க, சந்தோஷ் பிரதாப் அந்த வீட்டில் தங்குகிறார். முதிர்கன்னியாக இருக்கும் வரலட்சுமி, மிகவும் ஏழ்மையில் தவிக்கும் சார்லியின் குடும்பம் என இவர்களின் நிலைமையை பார்த்து பரிதாபப்பட்ட சந்தோஷ் பிரதாப் தான் கொண்டு வந்த பணம், நகைகளை கொடுத்து உதவி செய்ய நினைக்கிறார்.

முதலில் இந்த உதவியை மறுத்துவிடும் சார்லியின் குடும்பம், பின்னர் வரலட்சுமி சரத்குமாரோடு சேர்ந்து கொண்டு சந்தோஷ் பிரதாப்பை கொலை செய்துவிட்டு அந்த நகை, பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர். இதை அடுத்து வரலட்சுமி குடும்பத்தின் கொலை, கொள்ளை திட்டம் நிறைவேறியதா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் கதையாக பார்க்கும் பொழுது மிக எளிமையான கதையாக இருந்தாலும் ஒரு நாவலை படிக்கும் பொழுது நமக்கு எந்த அளவு சுவாரசியம் ஏற்படுமோ அதுபோல் ஒவ்வொரு ஸ்டெப் பை ஸ்டெப்பாக கதையை நகர்த்தி கிரிப்பிங்கான திரைக்கதையோடு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல திரில்லர் படம் பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் தயாளன் பத்மநாபன். 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளியான ஒரு நாடகத்தை மையமாக வைத்து கன்னடத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு ‘ஆ காரல ராத்திரி’, பின்னர் 2020ஆம் ஆண்டு தெலுங்கில் ‘அனகனகா ஓ அதிதி’ என்று அதே படத்தை ரீமேக் செய்து வெற்றி கண்ட இயக்குநர் தற்போது இதே படத்தை தமிழிலும் கொடுத்து பாஸ் மார்க் வாங்கியுள்ளார். இருந்தும் முதல் பாதி சற்றே மெதுவாக நடந்து நம்மை சோதித்தாலும் இரண்டாம் பாதி அதை சரிகட்டி பார்ப்பவர்களை சீட்டின் நுனிக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.

முதிர்கன்னியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார் அந்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை மீண்டும் ஒருமுறை சிறப்பாக செய்து கவனிக்க வைத்துள்ளார். இவரது வெர்சடைலான நடிப்பும், சின்ன சின்ன முகபாவனைகளும் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஓரக்கண்ணில் சைட் அடிப்பதில் இருந்து ஆரம்பமாகி, பின்னர் கொலைகாரியாக மாறும் வரை ஒவ்வொரு அத்தியாயத்தையும் அழகாக கடந்து, தான் ஒரு தேர்ந்த நடிகை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

வளர்ந்து வரும் நடிகர் சந்தோஷ் பிரதாப் சொல்லிக் கொள்ளும்படி சிறப்பாக நடித்து கவனம் பெற்றுள்ளார். இவரது எதார்த்தமான நடிப்பு கதைக்கு நன்றாக உதவியுள்ளது. மிகவும் கவனிக்கத்தக்க வகையில் குருடனாக நடித்திருக்கும் சென்ராயன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மூத்த நடிகர் சார்லி எப்பொழுதும் போல் தனது அனுபவ நடிப்பால் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் உயிரூட்டி உள்ளார்.

வழக்கம்போல் தனது டிரேட் மார்க் எதார்த்தமான நடிப்பை இப்படத்திலும் வெளிப்படுத்தி காட்சிகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் வலுவை சேர்த்து படத்திற்கும் பக்கபலமாக அமைந்துள்ளார் ஈஸ்வரி ராவ். ஒரு திரில்லர் படத்திற்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்திருக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இன்னபிற இதர நடிகர்களும் அவரவருக்கான வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர்.

டூலெட் படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன் இரவுநேரக் காட்சிகளை மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்து படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். குறிப்பாக இன்டீரியர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கம்போல் இரைச்சலான பின்னணி இசை மூலம் சற்றே படத்தை திரும்பிப் பார்க்க வைக்க முயற்சித்துள்ளார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.

பின்னணி இசையை இன்னும் கூட சிறப்பாக செய்து இருக்கலாம். எங்கெல்லாம் அமைதி தேவையோ அங்கு கூட மிகவும் இரைச்சலான கத்தக்கூடிய இசையை திரும்பத் திரும்ப அனைத்து படங்களிலும் கொடுப்பதுபோல் ஒரே மாதிரி கொடுத்து வரும் சாம் சி.எஸ். தனது பின்னணி இசை டெக்னிக்கை இன்னும் கூட மறுபரிசீலனை செய்யலாம்.

முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதி பரபரப்புடன் நகர்ந்து அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி நாம் சற்றும் எதிர்பாராத அளவிற்கு மிகவும் அதிரடியாக அமைந்து அதுவே இப்படத்தை தாங்கிப் பிடித்து கரை சேர்த்திருக்கிறது.

- Advertisement -

Read more

Local News