’கிடா’- விமர்சனம்

ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிக்க,  அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் உருவாக்கத்தில்,  பூ ராமு, காளி வெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கிடா.

மதுரைக்கு அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கிறார்கள், பூ ராமு மற்றும் அவரது மனைவி. உடன், இவர்களது பத்து வயது  பேரன் மாஸ்டர் தீபன்.

தென்னை ஓலையில் கீற்று நெய்து அதில் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். தீபாவளி பண்டிகை வர, பேரன் சுமார் 2000 ரூபாய் மதிக்கத்த உடை ஒன்றை கேட்கிறான். அதை வாங்கித் தருவதாக வாக்கு கொடுத்து விடுகிறார் தாத்தா.

ஆனால், வர வேண்டிய பணம் வரவில்ல.  வேறு வழியின்றி ஆசையாக  வளர்த்து வரும் கிடா ஒன்றை விற்க முயற்சிக்கிறார் பூ ராம்.

அது சாமிக்கு நேர்ந்து விட்ட கிடா என்று கூறி ஒருவரும் வாங்க மறுக்கின்றனர்.

மற்றொருபுறம், கோழி மற்றும் ஆடு கறி வெட்டிக் கொடுக்கும் கூலி வேலை செய்து வருகிறார் காளி வெங்கட். இவருக்கு திருமண வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

பல வருடங்களாக வேலை பார்த்த இடத்தில் தகராறு ஏற்பட, சொந்தமாக தீபாவளி தினத்தில் கறி வெட்டி தொழிலை தொடங்குவதாக சவால் விடுக்கிறார் காளி வெங்கட்.

அதற்காக, கிடாவை தேடி அலைகிறார். பலரும், காளி வெங்கட்டை நம்பி கிடாவை கொடுக்க மறுக்கிறார்கள். கடைசியாக, பூராமின் கிடாவை வாங்குவதாக கூறிவிடுகிறார்.

இதனால், தீபாவளிக்கு தனது பேரனுக்கு துணி எடுத்துக் கொடுத்துவிடலாம் என்று பூ ராமும், கேலி பேசிய ஊர் முன்னாள் கிடா’வை வெட்டி தனது தொழிலை தொடங்கி விடலாம் என்றும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் கிடா திருடு போய்விடுகிறது.

இதனால் இருவரும் அதிர்ச்சிக்குள்ளாக அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

பூராமு இந்த படத்திலும் சிறப்பாக நடித்து உள்ளார். பேரன் கேட்டதற்காக, அவனுக்கு உடை எடுத்துக் கொடுக்க அவர் படும் பாடு, கண்கலங்க வைக்கிறது.

அவரது மனைவியாக வரும்  பாண்டியம்மாளும் அற்புதமாக நடித்து உள்ளார்.   பேரனுக்கு டிரஸ் உடை வாங்குவதற்கு பணம் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் நடந்த நடையிலும், பேரனுக்காக வாங்கிய துணியை பாண்டியம்மா தொட்டுப் பார்த்த இடத்திலும் சிலிர்க்க வைக்கிறார்.

பேரனாக நடித்த மாஸ்டர் தீபன், சிறப்பாக நடித்திருக்கிறார். நடிகர் காளி வெங்கட் மிரள வைத்திருக்கிறார்.

அவர், எதேச்சையாக வீட்டில் எழும் காட்சியில் ஆரம்பித்து க்ளைமாக்ஸ் காட்சியில் பூ ராமின் கையில் பணத்தை கொடுக்கும் காட்சி வரை நடிப்பின் அரக்கனாக நிற்கிறார் காளி வெங்கட்.

தவிர காளி வெங்கட்டின் மனைவி, மகன், மகனின் காதலி, டீக்கடைக்காரர், காளி வெங்கட்டின் நண்பர், என படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை மிகக் கச்சிதமாக நடித்து முடித்திருக்கிறார்கள்.

தீசனின் இசை அற்புதம். ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவு தத்ரூபம். ஆட்டின் கண் அசைவு, ஆடு திருடர்களை பிடிக்கச் செல்லும் போது எடுக்கப்பட்ட காட்சி என ஆங்காங்கே குறிப்பிடும்படியான காட்சிகளை பலவற்றை வைத்திருக்கிறார்

இயல்பாக, மனிதர்களஇன் வாழ்வியலை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் ரா வெங்கட்.

கிடா – தமிழ் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து.