Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

சினிமா வரலாறு-13 – கே.பாலச்சந்தரை பயமுறுத்திய தயாரிப்பாளர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘பச்சை விளக்கு’ தொடங்கி ‘அனுபவி ராஜா அனுபவி’, ‘நவக்கிரகம்’, ‘பூவா தலையா’, ‘அவள் ஒரு தொடர்கதை’ என்று தமிழ்ப்பட உலகம் என்றும் மறக்க முடியாத பல அற்புதமான படங்களைத் தயாரித்த இராம அரங்கண்ணல் கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்டவர்.

அரசியலில் அறிஞர் அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் ஆகியோருக்கும் கலை உலகில்  சிவாஜி, கே பாலச்சந்தர் தொடங்கி பலருக்கும்  நெருங்கிய தோழராக இருந்தவர் அவர்.

அரங்கண்ணல் திரைப்படத் துறையில் லாபகரமாக செயல்பட்டது இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களோடு இணைந்து படங்களை எடுக்கத் தொடங்கிய பிறகுதான். அதற்கு அச்சாரம் போட்டவர் அரங்கண்ணல் அவர்களின் நண்பரான கோட்டையூர் அண்ணாமலை என்ற நண்பர்.

சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆசைப்பட்ட அவர் தனது நண்பரான அரங்கண்ணலின் கதை வசனத்தில்தான் படம்  எடுக்க வேண்டும் என்பதில்  உறுதியாக இருந்தார். அப்போது அரங்கண்ணல் ‘சலசலப்பு ஜானகி’ என்றொரு தொடர் கதை எழுதியிருந்தார். அந்தக் கதையையே சினிமாவுக்குத் தகுந்த மாதிரி மாற்றி அமைத்து ‘அனுபவி ராஜா அனுபவி’ என்று அதற்குப் பெயர் சூட்டினார் அரங்கண்ணல்.

அந்த சமயத்தில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ‘நீர்க்குமிழி’ படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த பிரபல கதாசிரியரான ஏ.கே.வேலன் அரங்கண்ணலுக்கு அந்தப் படத்தைப் போட்டுக் காட்டினார். அந்தப் படம் அரங்கண்ணலை மிகவும் கவர்ந்தது. அதை விடவும் அரங்கண்ணளைக் கவர்ந்தது அந்தக் கதையை பாலச்சந்தர் திரையிலே சொல்லியிருந்தவிதம்.

ஆகவே ‘அனுபவி ராஜா அனுபவி’ படத்திற்கு பாலச்சந்தரையே இயக்குநராக ஒப்பந்தம் செய்ய விரும்பினார் அரங்கண்ணல். ஆனால் தயாரிப்பாளர் அண்ணாமலையோ, கிருஷ்ணன் பஞ்சுவை இயக்குநராகப் போட ஆசைப்பட்டார். இறுதியில், அவரை ஒரு வழியாக சமாதானப்படுத்தி பாலச்சந்தரை ஒப்பந்தம் செய்ய வைத்தார்  அரங்கண்ணல்.

‘அனுபவி ராஜா அனுபவி’ படத்தின் கதையை எழுதிய அரங்கண்ணல்தான் அந்தப் படத்தின் வசனங்களையும் எழுதினார் என்றாலும் அப்போது  அரங்கண்ணல் தமிழ்நாடு சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக இருந்ததால் வசனகர்த்தா என்ற முறையில் தினமும் படப்பிடிப்புக்கு அவரால் செல்ல முடியவில்லை.

அரங்கண்ணல் எழுதித் தந்திருந்த ‘அனுபவி ராஜா அனுபவி’ படத்தின் காட்சிகள் பலவற்றில் மாற்றம் தேவைப்பட்ட போதெல்லாம்  அரங்கண்ணலின் அனுமதி இன்றி அவர் எழுதிய  வசனங்களில் பல மாற்றங்களைச் செய்து படமாக்கி விட்டார் இயக்குநர் கே.பாலச்சந்தர்.

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததும் எடுத்தவரையிலான படத்தைப் போட்டுப் பார்க்க அரங்கண்ணல் வந்தார். ஆனால், இயக்குநரான பாலச்சந்தர் அந்தக் திரையீட்டுக்கு வரவில்லை.

அரங்கண்ணல் எழுதியிருந்த வசனத்தில் பல மாற்றங்களைத் தான்  செய்திருந்ததால் படத்தின் கதை, வசனகர்த்தாவாக  மட்டுமின்றி படத் தயாரிப்பாளராகவும் இருந்த அரங்கண்ணல் அந்த மாற்றங்களை எப்படி எடுத்துக் கொள்வாரோ என்ற தயக்கத்தில்தான் பாலச்சந்தர் அந்தத் திரையீட்டுக்கு வரவில்லை.  

படத்தைப் பார்த்துவிட்டு திரை அரங்கை விட்டு வெளியே வந்த  அரங்கண்ணல் அருகில் நின்று கொண்டிருந்த தயாரிப்பு நிர்வாகியிடம் “பாலசந்தர் எங்கே..?” என்றுதான் முதலில்  கேட்டார். “அவர் வரவில்லை…” என்று அந்தத் தயாரிப்பு நிர்வாகி  சொன்னதும் ஆளை அனுப்பி பாலச்சந்தரை அழைத்து வரச் சொன்னார்.

அரங்கண்ணல் அழைத்து வரச் சொன்னார் என்ற செய்தியுடன் தயாரிப்பு நிர்வாகி வந்தபோது நிச்சயமாக இந்த படம் பிரச்னையில்தான் முடியப் போகிறது என்று எண்ணிக் கொண்டே காரில் ஏறினார் பாலச்சந்தர்.

திரை அரங்கிற்கு பாலச்சந்தர் வந்ததும்  “வசனங்கள்ல நிறைய மாற்றம் பண்ணியிருக்கீங்க  போல இருக்கு” என்று அரங்கண்ணல்  ஆரம்பித்த உடன், அடுத்து அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று பாலசந்தர் மட்டுமல்ல…  சுற்றியிருந்தவர்களும்  அமைதியாகிவிட்டார்கள். “இனி எடுக்கப் போகிற காட்சிகள் எல்லாவற்றிற்கும் நீங்களே வசனம் எழுதிவிடுங்கள்…” என்றார் அரங்கண்ணல்

அவர் அப்படிச் சொன்னதும் மிரண்டு போனார் பாலச்சந்தர். அவர் எழுதிய பல வசனங்களைத் தான்  மாற்றி எழுதிப் படமாக்கியதில் ஏற்பட்ட  கோபத்தில்தான்  அவர் அப்படிச்  சொல்கிறார்  என்ற எண்ணத்தில் சற்று கலக்கத்துடன் பாலச்சந்தர்  அரங்கண்ணலைப் பார்த்தபோதுதான் தான் சொன்னதை தவறான அர்த்தத்தில் பாலச்சந்தர் புரிந்து கொண்டிருக்கிறார் என்பது அரங்கண்ணலுக்கு புரிந்தது.

உடனே உரக்க  சிரித்தபடியே “ நீங்க என்னுடைய வசனத்தை மாத்திட்டீங்களே என்ற கோபத்தில் நான் அப்படி சொல்லவில்லை.. உண்மையில் உங்க வசனங்கள் எல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு. இந்தக் கதைக்கு நான் எழுதிய  வசனங்களில் நீங்க செய்திருக்கும் மாற்றங்களும் ரொம்ப சரியாக இருக்கு. அதனால் உங்க வசனத்தை ரசித்துத்தான் அப்படி சொன்னேன்…” என்றார் அரங்கண்ணல். அவர் அப்படிச்   சொன்ன பிறகுதான் சமாதானம் ஆனார் பாலச்சந்தர்.

‘அனுபவி ராஜா அனுபவி’ படத்திற்குப் பிறகு எத்தனையோ படங்களை அரங்கண்ணல்  தயாரித்த போதிலும் வசனம் எழுத தனது பேனாவை ஒரு முறைகூட அவர்  திறக்கவேயில்லை.

அரங்கண்ணலுக்கு மரியாதை செய்கின்ற விதத்திலே ‘அனுபவி ராஜா அனுபவி’ படத்தின் டைட்டிலில், நடிகர்கள் பெயருக்கு முன்னாலே ‘கதை-அரங்கண்ணல்’ என்று டைட்டில் போட்டார் பாலச்சந்தர்.

அந்தப் படத்தின் வளர்ச்சியோடு சேர்ந்து பாலச்சந்தர், அரங்கண்ணல் ஆகியோரது நட்பும் வளர்ந்தது. தனது அரசியல் நண்பர்கள் எல்லோரிடமும் “இவர்தான் பாலு. மிகப் பெரிய இயக்குனர்” என்று பெருமையோடு பாலச்சந்தரை அறிமுகம் செய்து வைப்பார் அரங்கண்ணல்.

‘அனுபவி ராஜா அனுபவி’ படத்தைத் தொடர்ந்து பாலச்சந்தர் உருவாக்கிய ‘எதிர் நீச்சல்’ படத்தை அப்போது முதல்வராக இருந்த அறிஞர் அண்ணாவிற்குப் போட்டுக் காட்டலாம் என்று பாலச்சந்தரிடம் அரங்கண்ணல் சொன்னபோது “அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவிருக்கிற நேரத்தில் அவரைத் தொந்திரவுபடுத்த வேண்டாமே..” என்றார் பாலச்சந்தர்.

“இல்ல பாலு.. படம் பார்க்கறதுன்னா நிச்சயமாக அண்ணா ‘சரி’ என்று சொல்லிவிடுவார். தவிர, இந்த ‘எதிர் நீச்சல்’ நாடகமாக நடத்தப்பட்டபோது நாங்கள் இருவருமே அந்த நாடகத்தைப் பார்த்திருக்கிறோம்” என்று சொன்ன அரங்கண்ணல் பாலச்சந்தரை அண்ணாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

படத்தைப் பார்க்க ஒப்புக் கொண்ட அண்ணா படம் முழுவதையும் ரசித்துப் பார்த்துவிட்டு பாலச்சந்தரையும், நாகேஷையும் வெகுவாகப்  பாராட்டினார். அறிஞர் அண்ணா பார்த்த கடைசிப் படம் கே.பாலச்சந்தரின் கை வண்ணத்தில் உருவான  ‘எதிர் நீச்சல்’தான்.

BOX  MATTER

“நான் தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் தயாரித்த ‘அவள் ஒரு தொடர் கதையின்’ தெலுங்குப் பதிப்பான ‘அந்துலேனி கதா’ படத்தை மூன்று மாதங்களுக்குள் படமாக்கி முடித்தார் கே.பாலச்சந்தர்.

அவர் மட்டும் அந்த உதவியைச் செய்யாமல் இருந்திருந்தால் இந்த சமுதாயத்தில் கடன் சுமையால் நான் அமுங்கிப் போய் இருந்திருப்பேன். என் வாழ்வில் நான் சந்தித்துக் கொண்டிருந்த பல தொல்லைகள் நீங்கிகியதற்கு பாலச்சந்தர் செய்த அந்த உதவிதான் காரணம்…”

‘அவள் ஒரு தொடர் கதை’ படத் தயாரிப்பாளர் ராம. அரங்கண்ணல் எழுதியது.

- Advertisement -

Read more

Local News