விமர்சனம்: கழுவேத்தி மூர்க்கன் 

கரடு முரடான மூர்க்க சாமியும், பொறுப்பான பூமி நாதனும் இருவேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அதை கண்டு கொள்ளாமல் நண்பர்களாய் பழகி வருகின்றனர். இவர்களின் நட்பு அரசியல் தலைவர்களின் ஆதாயத்திற்கு தடையாய் நிற்க இதில் பூமி கொல்லப்படுகிறான். அந்தப்பழி மூர்க்கன் மீது விழுகிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பது படத்தின் மீதிக்கதை!

கிடுக்கு மிடுக்கான உடல் மொழியுடன் அனல் பறக்க மூர்க்கனாய் வரும் அருள்நிதி ஆக்ஷனில் மிரட்டுகிறார். இந்தப்படம் அவரது சினிமா கேரியரில் இனி ஆக்ஷன் படங்களை அவர் பக்கம் இழுத்து வரும். பூமியாக சந்தோஷ் பிரதாப். அவரால் இயலும் வரைக்கு அவர் நல்ல நடிப்பை கொடுத்து இருந்தாலும் அவர் உடல் மொழி அந்தக் கதாபாத்திரத்தோடு ஒட்டவில்லை. இன்னும் நல்ல தேர்வாக தேர்ந்து எடுத்து இருக்கலாம்.

துஷாரா விஜயனின் திமிரான நடிப்பு ரசிக்க வைக்கிறது. ஆனால் அவரது காதலை இன்னும் ஆழமாக காட்டி இருக்கலாம். இதர நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து இருக்கின்றனர்.

இரு சமுதாயங்களை பற்றிப் பேசும் கதை என்பதால் மிக மிக கவனமாக கையாள வேண்டிய ஆளுமை இயக்குனருக்கு தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட ஆளுமையாக இருந்து படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குநர் கவுதம் ராஜ். முதல் பாதியில் சில இடங்களில் ஏற்கனவே நாம் பார்த்து பழகிய காட்சிகள் இருந்தாலும் இரண்டாம் பாதி முழுக்க அனலின் உச்சமாக இருக்கிறது. டி இமானின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக இருக்கிறது.

மொத்தத்தில் ரசிக்க வைக்கும் படம்.