Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

“வெள்ளித்திரைக்கு வந்த கே.பி.” – கரு.பழனியப்பனுக்குக் கிடைத்த பாராட்டு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘பார்த்திபன் கனவு’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் கரு.பழனியப்பனின் ரசிகராகவே மாறிப் போன ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர், ‘சிவப்பதிகாரம்’ படத்தைப் பார்த்துவிட்டு தன்னைப் பாராட்டிய சம்பவத்தை சமீபத்திய ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார் இயக்குநர் கரு.பழனியப்பன்.

“இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் எனக்கு அறிமுகமான சம்பவமே சுவையானது. பார்த்திபன் கனவு’ படத்திற்கான சினிமா விமர்சனத்தை எழுதிய மூத்தப் பத்திரிகையாளர் ராம்ஜி. ‘சின்னத்திரைக்கு சென்றார் கே.பி.’ ‘வெள்ளித்திரைக்கு வந்தார் இன்னொரு கே.பி.’ என்று அதற்குத் தலைப்பிட்டிருந்தார்.

அதைப் படித்து டென்ஷனாகிவிட்டார் கே.பாலசந்தர். “யாருய்யா அந்த கரு.பழனியப்பன்..? அவன் இன்னொரு பாலசந்தரா..?” என்று கோபத்துடன் கேட்டுவிட்டு பார்த்திபன் கனவு’ படத்தைப் பார்த்திருக்கிறார். பார்த்துவிட்டு எனக்கு போன் செய்தார்.

“நான் உன்னைப் பார்க்கணும்.. எங்க இருக்க..?” என்று கேட்டார். “ஸார்.. நானே வர்றேன் ஸார்.. எதுக்கு ஸார் நீங்க அலையணும்..?” என்றேன். “இல்ல.. இல்ல.. நான்தான் உன்னைப் பார்க்க வரணும்.. என்ன படம்ய்யா எடுத்திருக்க..? அசந்துட்டேன்யா…” என்று சொல்லி என்னைப் பாராட்டித் தள்ளிவிட்டார். பாராட்டுவதில் ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தருக்கு நிகர் வேறு யாருமில்லை.

நான் இரண்டாவதாக இயக்கியிருந்த ‘சிவப்பதிகாரம்’ திரைப்படம் பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் தாண்டி திரைக்கு வந்தது. ஆனால். அன்றைய நாளின் மாலைக் காட்சியிலேயே அந்தப் படத்தின் தோல்வி எனக்குத் தெரிந்துவிட்டது.

இந்தப் படத்தை கே.பி. பார்க்க விரும்பினார். அவருக்கு ஸ்பெஷல் ஷோ போட்டுத் தருவதாகச் சொன்னேன். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. சத்யம் தியேட்டரில் ரசிகர்களோடு அமர்ந்து பார்த்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டு தியேட்டருக்கு வந்தார்.

படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வந்தார். நானும், தயாரிப்பாளரும் வெளியில் நின்றிருந்தோம். வந்தவுடன் என்னைக் கட்டிப் பிடித்து.. “என்னய்யா எடுத்திருக்க..! இத்தனை தைரியமா எடுத்திருக்கய்யா..?! அந்த அம்மா கேரக்டரை வடிவமைச்சிருக்க பாரு.. சத்தியமா யாருக்கும் வராது..” என்று பாராட்டித் தள்ளினார்.

விமர்சனங்கள் வேறு மாதிரி வருவதைப் பற்றி நான் சொன்னவுடன், “அதை விடுய்யா.. நான் வந்திருக்கேன்ல்ல.. பாலசந்தர் சொல்றான்ல.. அதையெல்லாம் விட்டுத் தள்ளு..” என்று சொல்லி என்னைச் சமாதானப்படுத்தினார்.

அவ்வளவு பெரிய மனிதர்.. ஒரு சாதாரண இயக்குநரை இந்த அளவுக்கு மனமிறங்கி பாராட்டுகிறார் என்றால் உண்மையில் அவர்தான் ‘இயக்குநர் சிகரம்’. என் மனதில் எப்போதும் அவர் உயர்ந்து நிற்கிறார்..” என்று உருக்கத்துடன் கூறியிருக்கிறார் இயக்குநர் கரு.பழனியப்பன்.

- Advertisement -

Read more

Local News