ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ’காந்தாரா’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ரிஷப்ஷெட்டியை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ள சில விசயங்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளன.
அக்கடிதத்தில், “நான் கடவுள் நம்பிக்கையற்றவன் என்றாலும் நிறைய பேருக்கு கடவுள் தேவைப்படுகிறது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். நம் புராணங்களில் உள்ள கடவுள் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். திராவிட இனத்தில் நாம் ஒரு தாய் வழி சமூகம், உங்கள் படத்தின் இறுதி காட்சியில் அது நன்றாக தெரிகிறது. தந்தையை விட தாயாக கடவுள் நடந்து கொள்கிறார், அப்படித்தான் உங்களுடைய படைப்பு ஒரு உன்னதமான அந்தஸ்தை பெறுகிறது.

எம்டி வாசுதேவன் நாயரின் ‘நிர்மால்யம்’ என்ற படத்தை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை என்று எனக்கு தெரியும். உங்கள் படத்தில் அந்த படத்தின் சாயல்கள் உள்ளன. ’காந்தாரா’ படத்தின் சாதனையை நீங்கள் அடுத்த படத்தில் முறியடிக்க வேண்டும்’ என்று கமல் எழுதி உள்ளார்.
படத்தை பாராட்டினாலும், புராண கடவுள்கள் இரக்கமில்லாதவர்கள் என அவர் குறிப்பிட்டு உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.