காரி – சினிமா விமர்சனம்

சர்தார்’ படத்தைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான எஸ்.லஷ்மண்குமார் தனது 5-வது படைப்பாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார். 

இந்தப் படத்தில் நாயகனாக சசிகுமாரும், கதாநாயகியாக மலையாள நடிகையான பார்வதி அருணும் நடித்துள்ளார். வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் ஜேடி சக்ரவர்த்தி நடித்துள்ளார். இவர்கள் தவிர முக்கிய வேடங்களில் இயக்குநர் பாலாஜி சக்திவேல், ‘ஆடுகளம்’ நரேன், ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, நாகி நீடு, பிரேம், ‘பிக்பாஸ்’ புகழ் சம்யுக்தா, ராம்குமார், தேனி முருகன் மற்றும் பலர் நடித்துள்ளார்.

இசை – டி.இமான், ஒளிப்பதிவு – கணேஷ் சந்திரா, படத் தொகுப்பு – சிவ நந்தீஸ்வரன், கலை இயக்கம் – மிலன், சண்டை இயக்கம் – அன்பறிவு, நிர்வாகத் தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு மேற்பார்வை – A.பால் பாண்டியன், பத்திரிகை தொடர்பு – A. ஜான், எழுத்து, இயக்கம் – ஹேமந்த்.

நம்பிக்கைதான் வாழ்க்கை. உண்மையான நம்பிக்கையுடன் செயல்பட்டால் அது நிச்சயம் நடக்கும் என்கிறது இந்தப் படம். தனது கிராமத்தைக் காப்பாற்ற வேண்டி சென்னையிலிருந்து தன் சொந்த ஊருக்கு வரும் நாயகன் அதை செய்து முடித்தானா… இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

ராமநாதபுரம் அருகேயிருக்கும் காரியூர் மற்றும் சிவனேந்தல் என்ற இரண்டு கிராமங்களுக்கும் இடையே பொதுவான கோயிலாக கருப்பன் கோயில் இருக்கிறது. பல்லாண்டு காலமாக மோதல் காரணமாக சாமி கும்பிடாமல் இருக்கும் இந்தக் கோவிலை இந்த வருடம் திருவிழா நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது.

ஆனால், இந்தக் கோயில் நிர்வாகத்தை யார் நடத்தி, திருவிழாவை பொறுப்பேற்று நடத்துவது யார் என்ற மோதல் இரண்டு கிராமத்தினருக்கும் இடையில் மீண்டும் மோதல் வெடிக்கிறது. கடைசியில் இரு தரப்பினருக்கும் பொதுவாக 18 வகையான ஜல்லிக்கட்டு மாடுகளை வைத்து ஜல்லிக்கட்டு நடத்தி அதில் எந்த ஊர் ஜெயிக்கிறதோ அவர்களை கருப்பன் கோவில் நிர்வாகத்தைக் கையில் எடு்த்துக் கொள்ளலாம் என்று முடிவாகிறது.

போட்டிக்கான களம் சூடு பிடிக்கத் துவங்குகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு காளைகளை அடக்க, அதே காரியூரை பூர்விகமாக கொண்டவரான வெள்ளைச்சாமி சேர்வையைத் தேடி சென்னைக்கு வருகிறார்கள் ஊர்ப் பெரியவர்களான நாகி நீடுவும், வெள்ளைச்சாமி சேர்வையின் மைத்துனரும்.

சென்னையில் ஒரு சமூகப் போராளியாக, ஜீவகாருண்ய சங்கத்தின் முக்கியத் தளகர்த்தராகத் திகழும் ஆடுகளம் நரேனைத் தேடுகிறார்கள். இவர்கள் வந்த நேரம் நரேனின் மகனான சேது என்ற சசிகுமாருக்கும், அவருக்கும் இடையில் பிரச்சினை எழுந்து, தாங்க முடியாத மன வலியால் உயிரை விட்டுவிடுகிறார் நரேன். தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகளினால் சசிகுமார் தனது சொந்த ஊருக்கு வருகிறார்.

இங்கே வந்து பார்த்தால் ஜல்லிக்கட்டில் ஜெயிக்க வேண்டும்.. கருப்பன் கோவில் திருவிழாவை நடத்த வேண்டும். மாநில அரசு அந்த ஊரை குப்பைக் கூளமாக்க நினைத்திருக்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு வேலைகள் நாயகனுக்காக வரிசையாகக் காத்திருக்கின்றன.

இறுதியில் கோயில் நிர்வாகத்தை யார் கைப்பற்றியது..? சேது ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு காளையை அடக்கினாரா..? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்வதுதான் இந்தக் ‘காரி’ படம்.

சசிகுமாரின் உடன் பிறந்த திறமையான மதுரைக்கார தமிழும், அந்த எளிமையான நடிப்பும் இந்தப் படத்திற்குப் போதுமானதாக இருந்தாலும், நடிப்புக்குப் போதாமையாகத்தான் இருக்கிறது.

சமூகப் போராளியான நரேனின் ஆர்ப்பாட்ட அட்டகாசத்தைத் தாங்க முடியாமல் தவிக்கும் மகனாக பொங்கியெழுகிறார். நண்பனுக்காக உதவி செய்வது முக்கியமா… அல்லது முதலாளிக்கு விசுவாசமாக இருப்பது முக்கியமா என்று அப்பாவிடம் வாதிடுகிறார். நாயகியைப் பார்த்தவுடன் லவ்வாகி காதலை அரும்பாகி, மொட்டாகி, பூவாகி, துளிர்விட வைக்கிறார்.

பக்கத்து ஊர்க்காரர்களையும், அரசையும் வித்தியாசமான முறையில் ஏமாற்றி அந்தத் திட்டங்களைத் தடுத்து நிறுத்தி ஜல்லிக்கட்டிலும் ஜெயித்துக் காட்டுகிறார். இப்படி ஒரு ஹீரோ என்னென்ன செய்வாரோ அனைத்தையும் செய்துவிட்டார் சசிகுமார். ஆனால் நடிப்பென்று பார்த்தால் வழமையானதுதான். வேறொன்றும் சொல்வதற்கில்லை.

படத்திலேயே நடித்திருக்கிறார்கள் என்று வெளிப்படையாகப் பாராட்ட வேண்டுமென்றால் அது நாயகி, நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல் மற்றும் ஆடுகளம் நரேன் மூவரின் நடிப்புதான்..! சிம்ப்ளி சூப்பர்ப்..!

மகளின் கல்யாணத்திற்காக மாட்டை விற்கப் போகுமிடத்தில் பாலாஜி சக்திவேல் காட்டும் நடிப்பு அசர வைக்கிறது. அவருடைய உடல் மொழியே பேசியிருக்கிறது. விற்றுவிட்டு வீட்டுக்கு வந்து மகளை சமாதானம் செய்ய முடியாமல் அவர் தவிக்கும்  தவிப்பு இன்னும் ஒரு படி மேலே கொண்டு போயுள்ளது அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சை.!

ஆடுகளம் நரேன் சுற்றுச் சூழல் போராளியாக.. சமூகப் போராளியாக தானே முன்னின்று போராடும் காட்சிகளில் தனித் திறமையைக் காட்டியிருக்கிறார். ஆனால் அவரது மேக்கப்புதான் உறுத்தலாக இருக்கிறது. அதேபோல் மகன் ரேஸ் பந்தயத்தில் தோல்வியடைந்த பின்பு அவர் காட்டும் ஆக்ரோஷம் அசத்தல்..!

நாயகியோ அறிமுகப் படம் என்பதால் அடக்கி வாசிக்காமல் எரிமலையாய் வெடித்திருக்கிறார். சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களைக் காட்டி ரசிகர்களைக் குளிர வைத்த கையோடு மாடு விற்பனையானது தெரிந்து கதறி, அழுது, கூப்பாடு போடும் காட்சியில் தனது நடிப்புத் திறனையும் வெளிக்காட்டியிருக்கிறார். நல்வரவுதான்..!

‘காரி’ என்ற அந்தக் காளையைக் காண்பித்திருக்கும்விதமே சூப்பர். அம்மு அபிராமி, ரெடின் கிங்ஸ்லி இருவரும் ஏதோ ஒப்புக்கு சப்பாணி போல நடித்துள்ளனர். வில்லனான ஜே.டி.சக்கரவர்த்தி தனது வில்லனத்தனத்தை மொத்தமாய் காண்பித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவில் கிளைமாக்ஸ் ஜல்லிக்கட்டு காட்சிகள் மிக அழகாய் படமாகியிருக்கிறது. புழுதி பறக்கும் ஆடுகளம்… சீறிப் பாயும் காளைகள், தூக்கி வீசப்படும் வீரர்கள்… என்று அது காட்டும் விஸ்தாரமான காட்சிகள் சற்றுப் பிரமிப்பைத் தருகின்றன. மேலும் அடிக்கடி காண்பிக்கப்படும் அந்தக் கிராமத்தின் ஏரியல் ஷாட்டுகள் அங்கேயே நம்மைத் தூக்கிச் செல்கின்றன. 

டி.இமானின் பின்னணி இசை ஜல்லிக்கட்டு போட்டிக்கு போர்க்களக் காட்சிக்கான விவரணையைக் கொடுத்திருக்கிறது. பாடல்கள் கேட்கும் ரகமாக இல்லையென்றாலும் நமது காதுகளை அலற வைக்கவில்லை.

மெது, மெதுவாக நகர்ந்து கடைசியில் பேரலையாக வந்து மோதும் இந்தப் படத்தின் திரைக்கதை, இடையிடையே பல இடங்களை நோக்கி இலக்கில்லாமல் அலை பாய்ந்திருப்பதுதான் படத்தின் மிகப் பெரிய குறைபாடு.

மொத்தத்தில் இந்தக் ‘காரி’ படம், கிளைமாக்ஸில் காட்டிய வேகத்தை படத்தின் துவக்கம் முதலே காட்டியிருந்தால் இதைவிடவும் அதிகமான பாராட்டுக்களும், பெருமையும் இந்தப் படத்திற்குக் கொடுத்திருக்கும்.

இருந்தாலும் படத்தில் நாகி நீடு முன் வைக்கும் “எந்தவொரு நல்ல நோக்கத்தோடு வைக்கப்படும் நம்பிக்கையும் வீண் போகாது…” என்ற கருத்துக்காகவே இந்தப் படம் பாராட்டுக்குரிய திரைப்படமாகிறது..!

RATING : 3.5 / 5