Saturday, April 13, 2024

கேபிள் டிவியில் ஒளிபரப்பான ‘க/பெ.ரணசிங்கம்’ திரைப்படம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீப ஆண்டுகளில் தியேட்டர்களில் புதிய திரைப்படங்கள் வெளியானதுமே அவற்றின் திருட்டு டிவிடிக்களும் வெளியாகிவிடும். இந்தத் திருட்டு டிவிடிக்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் தயாராகி வந்து கொண்டிருந்தன.

சில முறைகள் மட்டுமே தமிழ்நாட்டிலுள்ள தியேட்டர்களில் இருந்தும் திருட்டு டிவிடி தயாரிக்கப்பட்டு வெளியானது. இதையும் கண்டுபிடித்துவிட்டார்கள். இதைத் தடுக்கவும் தற்போதும் போராடி வருகிறது தமிழ்த் திரைப்பட துறை. இந்த லட்சணத்தில் இப்போது இணையத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியிடும்போதுகூட திருட்டு டிவிடி வந்து தமிழ்த் திரைப்பட துறையினரை பெரும் அதிர்ச்சியாக்கியிருக்கிறது.

இந்தக் கொரோனா காலக்கட்டத்தில், தியேட்டர்களில் திரைப்படங்களை ரிலீஸ் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் பல பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களில், தற்போது வெளியாகி வருகின்றன.

இந்த வரிசையில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெரணசிங்கம், என்ற திரைப்படம் ஜீ பிளக்ஸ் என்னும் ஓடிடி தளத்தில் சென்ற அக்டோபர் 2-ஆம் தேதி வெளியானது. ரிலீஸான 2 மணி நேரத்திலேயே, தமிழ் ராக்கர்ஸில் இத்திரைப்படம் ‘லீக்’ ஆகிவிட்டது, இதிலேயே தயாரிப்பாளர்கள் தரப்பு அப்செட்டாகிவிட்டார்கள்.

அடுத்த அதிர்ச்சியாக, ராஜபாளையத்தில் ஒரு கேபிள் டிவியில் இந்தப் படத்தை திரையிட்டிருக்கிறார்கள். இது பற்றி விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினர் சிலர் விஜய் சேதுபதியைத் தொடர்பு சொல்ல.. அவர் உடனுக்குடன் இத்திரைப்படத்தின் இயக்குநர் விருமாண்டியையும், வசனகர்த்தா சண்முகம் முத்துசாமியையும் விமானத்தில் மதுரைக்கு அனுப்பி வைத்தார்.

இயக்குநரும், வசனகர்த்தாவும் மதுரையில் இருந்து ராஜபாளையம் வந்து அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் துணையுடன் க/பெ.ரணசிங்கம் படத்தைத் திருட்டுத்தனமாக ஒளிபரப்பிய, உள்ளூர் சேனலான ‘வைமா’ டிவி அலுவலகத்தை முற்றுகையிட்டு சோதனை நடத்தி விசாரித்தனர்.

அப்போது அத்திரைப்படம் அந்த கேபிள் டிவியில் ஒளிபரப்பானது தெரிய வந்ததால் அந்த அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட தொலை தொடர்பு சாதனங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டது. கேபிள் டிவி நிறுவனத்தின் உரிமையாளரான திருப்பதி செல்வன் தலைமறைவாகிவிட்டார்.

இது குறித்து படத்தின் வசனகர்த்தாவான சண்முகம் முத்துசாமி பேட்டியளித்தபோது, “ஜனவரியிலேயே தயாராக இருந்த படத்தை.. நாங்கள் திரையரங்குகளில்தான் வெளியிடணும்ன்னு வச்சிருந்தோம். ஆனால், தயாரிப்பாளரோட பொருளாதார நெருக்கடியினால் வட்டி கட்ட முடியாமல் தவித்ததால் வேறு வழியில்லாமல்… இந்த படத்தை ஓடிடி-க்கு கொடுத்தோம்.

இந்த நேரத்துல, எங்களிடம் அனுமதியில்லாமல் முறைகேடாக, திருட்டுதனமாக டிவிடியில்  காப்பி செய்து இந்தக் கேபிள் டிவிக்காரர்கள் படத்தைத் திரையிட்டு காசு சம்பாதித்திருக்கிறார்கள்.

இத்திரைப்படம் பல பேரோட உழைப்பு. இன்னும் பல பேர், இந்தப் படத்தோட வெற்றி மற்றும் வசூலை நம்பி இருக்கிறாங்க. நாங்களும் இதை நம்பித்தான் இருக்கிறோம். தயவு செய்து மக்கள் இது போன்ற உரிமம் இல்லாத படங்களை திருட்டு டிவிடியில் பார்ப்பதை ஆதரிக்கக் கூடாது. இந்த மாதிரி திருட்டு டிவிடியாவோ, கேபிளில் அனுமதியில்லாமலோ திரைப்படத்தை திரையிட்டால்  அவங்க மேல குண்டாஸ் சட்டம் பாயும்ன்னு தமிழக அரசு ஒரு சட்டமே போட்டிருக்கு. அதன்படி, காவல்துறை நடவடிக்கை எடுப்பாங்கன்னு நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

தமிழகத்துல இந்த மாதிரி பைரஸி.. எங்கே நடந்தாலும், எங்க கே.ஜே.ஆர். நிறுவனத்தைச் சேர்ந்தவங்களும், இயக்குநர் குழுவும், நாங்களும் அவர்களை கையும், களவுமாகப் பிடித்து, நேரடியாக காவல்துறையிடம் ஒப்படைப்போம்.

மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கணும். திரையரங்குகளில் பார்க்க வேண்டிய படத்தை, உங்களை நம்பித்தான் ஓடிடி-ல கொடுத்திருக்கோம். தயவு செய்து அதில் பணம் கட்டி பாருங்க.’ என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

- Advertisement -

Read more

Local News