Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

“இயக்குநர் விசு என்னால் ஜெயலலிதாவிடம் திட்டு வாங்கினார்” – நடிகர் ஆனந்த்ராஜ் சொல்லும் ரகசியம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தன்னை நடிக்க வைக்காமல் போனதற்காக இயக்குநர் விசுவை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கண்டித்த உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ்.

இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து பேசும்போது, “ஜெயலலிதாம்மா முதலமைச்சரா இருக்கும்போது தமிழக அரசு தயாரித்த பல குறும் படங்கள்ல என்னை நடிக்க வைச்சாங்க. அப்போவெல்லாம் ‘நான்தான் நடிக்கணும்’னு சொல்லி என்னைக் கூப்பிடச் சொல்லுவாங்க.

அந்த நேரத்துல குடிப் பழக்கத்தை விட்டொழிக்கணும்ன்னு மக்களுக்கு ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வரணும்ன்னு நினைச்சு, ‘நீங்க நல்லா இருக்கணும்’ன்னு ஒரு படம் தமிழக அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டது.

தமிழக அரசுக்காக அந்தப் படத்தைத் தயாரித்தவர் ஜீ.வி. கதை, வசனம் எழுதி இயக்கியவர் விசு. அந்தப் படம் பத்தி விசுகிட்ட பேசும்போது “ஆனந்த்ராஜை நடிக்க வைக்கலாம்” என்று ஜெயலலிதாம்மா சொல்லியிருக்காங்க. இதை விசு காதுல வாங்கினாலும், அதைப் பெரிசா எடுத்துக்காமல் விட்டுட்டாரு.

அப்போ அந்தப் படத்தோட துவக்க விழா வாஹினில நடந்துச்சு. எனக்கும் அழைப்பிதழ் வந்திருந்துச்சு. நானும் போயிருந்தேன். அம்மாவும் வந்தாங்க.. ஆனால், படத்துல ‘நிழல்கள்’ ரவிதான் நடிச்சாரு. எனக்கு வேஷம் எதுவுமில்லை.

படம் எல்லாம் முடிஞ்சு அம்மா பிரிவியூ தியேட்டர்ல படத்தைப் பார்த்துட்டு வெளில வந்தவுடனே முதல்ல விசுவைத் தேடிருக்காங்க.. விசுவைப் பார்த்துட்டு “மிஸ்டர் விசு, யுவர் ஆர்ட்டிஸ்ட் ராங் செலக்சன்..” அப்படீன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்களாம்.

அதுக்கு அவங்க சொன்ன காரணம்.. “நிழல்கள்’ ரவி.. ஹீரோவா நடிச்சவர்.. நல்ல, நல்ல குணச்சித்திர வேடங்கள்ல எல்லாம் நடிச்சவரு. அதுனால அவரை எல்லாரும் நல்லவராத்தான் பார்ப்பாங்க. ஆனந்த்ராஜ் வில்லன் கேரக்டர்லேயே நடிச்சவர். அவரைப் போட்டிருந்தா கடைசீல ஒரு கெட்டவனை திருத்தி நல்லவனாக்கிட்டாங்கன்னு மக்கள் நம்பியிருப்பாங்க..” என்று சொன்னாங்களாம்.

ரொம்ப நாள் கழித்து விசு என்கிட்ட, “உன்னால நான் அம்மாகிட்ட திட்டு வாங்கினேன்”னு இதைப் பத்திச் சொன்னாரு..!” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ்.

- Advertisement -

Read more

Local News