பழம் பெரும் பாலிவுட் நடிகையான ஜெயா பச்சன் தனது கணவரும் சூப்பர் ஸ்டாருமான அமிதாப் பச்சன் மற்றவர்களைப் பாராட்டி மலர்கள் மற்றும் கடிதங்கள் அனுப்புவதைப் போல் தனக்கு இதுவரையிலும் எதையும் செய்ததில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ‘பிக் பி’ என்றழைக்கப்படும் அமிதாப்பச்சன் இன்றைக்கு தனது 80-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
இதையொட்டி அவர் சோனி தொலைக்காட்சியில் தினமும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் ‘குரோர்பதி’ நிகழ்ச்சி இன்றைக்கு மிக சிறப்பான நிகழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய ‘குரோர்பதி’ நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சன் நிகழ்ச்சி நடத்துபவராகவும், அமிதாப்பச்சனும், ஜெயாபச்சனும் பங்கேற்பாளர்களாகவும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் புரோமோ இன்று காலை வெளியானது.
இந்த புரோமோவில் ஜெயா பச்சன், தனது கணவரான அமிதாப்பச்சனிடம் கேள்விகள் கேட்பதும் இதற்கு அமிதாப் பதிலளிக்க.. அபிஷேக்பச்சன் இவர்களைக் கிண்டல் செய்வதுமாக காட்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன.
ஜெயா பச்சன், அமிதாப்பிடம், “நீங்கள் ஒருவரின் திறமை அல்லது தனி மனித செய்கையால் ஈர்க்கப்பட்டால், நீங்கள் அந்த நபருக்கு மலர்கள் அல்லது கடிதங்களை அனுப்பி பாராட்டுகிறீர்கள். ஆனால் அதுபோல் இதுவரையிலும் எதையும் நீங்கள் எனக்கு அனுப்பி என்னைப் பாராட்டியதே இல்லையே.. ஏன்..?” என்று கேள்வியெழுப்புகிறார்.

அமிதாப்பச்சனும் இதை ஆமோதிப்பதுபோல தலையசைக்கிறார். எதிரில் அமர்ந்திருக்கும் அபிஷேக்பச்சன் “இது இப்போ லைவ்ல போயிட்டிருக்கு. இது நல்லதுக்கில்லை..” என்று கூறி தூபம் போட அமிதாப்பச்சன் அதிர்ச்சியாகிறார். இப்படி இந்த புரோமோவில் சுவாரஸ்யமான காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
மேலும் ஜெயா பச்சன் தொடர்ந்து அமிதாப்பிடம், “ஒரு தீவில் என்னுடன் தனியாக மாட்டிக் கொண்டால் என்ன செய்வீர்கள்..?” என்று கேட்கிறார். இதற்கு அமிதாப்பச்சன் “இந்தக் கேள்விக்கு ஆப்ஷன் ஏதாவது இருக்கிறதா…?” என்று கேட்க.. “இந்தக் கேள்விக்கு ஆப்ஷனே இல்லை” என்கிறார் ஜெயா பச்சன்.
இந்த சுவாரஸ்யம் தாங்கிய குரோர்பதி நிகழ்ச்சி இன்று இரவு 9 மணிக்கு சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.