அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ‘விடாமுயற்சி’ படத்திற்கு பிறகு இந்தப் படத்திலும் த்ரிஷா அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், பிரியா வாரியர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தில் இடம்பெற்ற பிரியா வாரியரின் நடனக் காட்சிகள் இணையத்தில் ஒரு புறம் டிரெண்டாகிக் கொண்டிருக்க, மற்றொரு புறம் நடிகை சிம்ரன் சிறிய தோற்றத்தில் நடித்த காட்சிகளும் வைரலாகி வருகின்றன.
‘வாலி’, ‘உன்னைக் கொடு என்னைத் தருவேன்’ போன்ற படங்களுக்குப் பிறகு இந்தப் படத்திலும் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார் சிம்ரன். அவருடைய கதாபாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து, தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றைச் செய்துள்ளார் சிம்ரன். அந்த பதிவில், “கேமியோ கதாபாத்திரமாக வந்தேன். ஆனால் அந்தப் படத்திலிருந்து வெளியேறும் போது உங்கள் அன்பையும் ஆதரவும் பெற்றிருக்கிறேன். அஜித் சாருடன் மீண்டும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்! இந்த ஃபன் பயணத்துக்கு காரணமான இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.