இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டிலேயே தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுவந்தது. இப்படத்தில் நித்யா மேனன், யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே, “19 (1) (ஏ)” என்ற மலையாள திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தக் கதையில், விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் முதல் முறையாக இணைந்திருப்பதால், ரசிகர்கள் மத்தியில் உயர்ந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில், விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னர், படத்தின் தலைப்பு “ஆகாச வீரன்” என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.