நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கியுள்ள திரைப்படம் ‘கூலி’. இப்படத்திற்கு இசையமைத்தவர் அனிருத். இந்த படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள ‘மோனிகா’ பாடல் கடந்த வாரம் வெளியானது மற்றும் அதற்கு ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பும் கிடைத்துள்ளது.
இந்நிலையில், ‘கூலி’ திரைப்படத்தின் கதை கரு இதுதான் என இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதன் படி, ரஜினிகாந்த் ஒரு பவர்ஃபுல் கேங்க்ஸ்டராக கதை நகர்கிறது. தனது கடந்த கால தவறுகளை சரி செய்ய விரும்பும் அவர், தன்னுடைய எதிரிகளை வீழ்த்திய பிறகு ஒரு புதிய வாழ்க்கையை தொடங்குகிறார். இந்த கதையில் ஆக்ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான கூறுகளை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனக்கே உரிய பாணியில் உருவாக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.