இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் மார்ச் 14ம் தேதி வெளியான ‘பெருசு’ திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் இப்படம் பார்ப்பவர்களிடையே பெரிதும் பேசப்படுகிறது. இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகளுக்காக பல பிரபலங்களும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். தற்போது, இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமை விற்கப்பட்டுள்ளது.
‘பெருசு’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை ஹன்சல் மேத்தா மற்றும் முகேஷ் ஷாப்ரா ஆகியோர் இணைந்து பெற்றுள்ளனர். இந்த ரீமேக் யார் இயக்கப்போகிறார், யார் நடிக்கப்போகிறார் என்ற விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமை, திரையரங்கில் வெளியீடு பெறுவதற்கு முன்பே விற்கப்பட்டுவிட்டது. இதனால், இப்படத்தின் தயாரிப்பாளருக்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
வைபவ், நிஹாரிகா, சுனில், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் ‘பெருசு’. இளங்கோ ராம் இயக்கிய இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ், ஹர்மன் பவேஜா, எம்பர்லைட் ஸ்டூடியோஸ் மற்றும் சசி நாகா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.