நடிகர் பிரித்விராஜ் ஒரு பக்கம் வெற்றிகரமான நடிகராகவும், இன்னொரு பக்கம் திறமைமிக்க இயக்குநராகவும் இரட்டை வேடத்தில் பயணித்து வருகிறார். அவருடைய இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் உருவாகிய லூசிபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற நிலையில், வரும் மார்ச் 27ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மற்றொரு பக்கம், நீண்ட நாட்களாக அவர் நடித்து வந்த விலாயத் புத்தா படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு முன்பு, தனது சமூக வலைதளப் பக்கத்தில், தாடியை கடித்து, கிளீன் ஷேவ் செய்த புதிய புகைப்படத்தைக் பகிர்ந்திருந்தார். அதில், “மீண்டும் நடிகராக உங்கள் முன் தோன்றவிருக்கிறேன்… அதேசமயம், எனது சொந்த மொழி அல்லாத இன்னொரு மொழியில் நடிக்க இருப்பதால் சிறிய பதட்டமும் இருக்கிறது.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கனவே, மகேஷ் பாபு – ராஜமௌலி கூட்டணியில் உருவாகும் படத்தில், அவர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த பதிவை பார்த்த ஒரு ரசிகை “இது பிரித்விராஜின் புகைப்படம் அல்ல… அவர் உருவாக்கிய AI புகைப்படம், யாரும் நம்ப வேண்டாம்!” எனக் கருத்து தெரிவித்தார். இதற்கு உடனடியாக, பிரித்விராஜின் தாயார் மல்லிகா சுகுமாரன், “இது AI புகைப்படம் அல்ல… ராஜமௌலி படத்தில் நடிக்கப் போகிறார்… இன்று இரவு கிளம்புகிறார்.” என்று தகவலை உறுதிப்படுத்தி விட்டார்.