நடிகை த்ரிஷாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பரமபதம் விளையாட்டு’. இந்தப் படம் 2 ஆண்டுகளுக்கு முன்பேயே தயாராகியும் இதுவரையிலும் வெளியாகாமல் உள்ளது.
தற்போது ‘டிஸ்னி ஹாட்ஸ்டார்’ ஓடிடி தளத்தில் இத்திரைப்படத்தை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. ஓடிடியில் வெளியிடுவதற்கு முன்பாக இந்தப் படத்தை படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் பிரமோஷன் செய்ய வேண்டும் என்று ஓடிடி தள நிறுவனம் படத்தின் தயாரிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதனால் இந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வரும்படி படத்தில் நாயகியாக நடித்திருக்கும் த்ரிஷாவிடம் படத்தின் தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டார். ஆனால், ஏதேதோ காரணங்களைச் சொல்லி த்ரிஷா வர மறுத்துவிட்டாராம்.
இத்தனைக்கும் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு கண்டிப்பாக வருவேன் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளாராம் த்ரிஷா.
தயாரிப்பாளர் வேறு வழியில்லாமல் தான் உறுப்பினராக இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து சங்க நிர்வாகிகள் இது குறித்து த்ரிஷாவிடம் பேசியபோது, “நயன்தாராவும்தான் எந்தப் படத்தோட பிரமோஷனுக்கும் வர்றதில்லை. நீங்க அவங்களை ஏன்னு கேட்டிருக்கீங்களா.. அப்புறம் ஏன் என்னை மட்டும் கேக்குறீங்க..?” என்று திருப்பிக் கேட்டிருக்கிறார் த்ரிஷா.
“ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டிருக்கீங்களே..?” என்று நிர்வாகிகள் திருப்பிக் கேட்டதற்கு.. “இந்தப் பட பிரமோஷனுக்கு நான் வர மாட்டேன்…” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாராம் த்ரிஷா.
இதையடுத்து கோபமான தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் இது குறித்து பெப்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். இனிமேல் த்ரிஷா நடிக்கும் படத்திற்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று சொல்லி மறைமுகமாக த்ரிஷாவுக்கு தடை விதிக்க இரண்டு அமைப்பினரும் பேசி வருகிறார்கள்.
‘பரமபதம் விளையாட்டு’ என்று பெயர் வைத்தாலும் வைத்தார்கள்.. இந்தப் படத்தைத் துவக்கியதில் இருந்து இன்றுவரையிலும் இந்தப் படத் தயாரிப்பாளரின் நிலைமை ஏற்றம், இறக்கமாகத்தான் இருக்கிறது.