தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளை’ திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. பின்னர் ‘ஒரு கல் ஒரு கண்ணடி’, ‘எங்கேயும் காதல்’, ‘தீயா வேலை செய்யனும் குமாரு’, ‘சேட்டை’, ‘வேலாயுதம்’, ‘வாலு’ உள்ளிட்ட திரைப்படங்களில் தொடர் வெற்றியுடன் நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிஸியாக இருந்த ஹன்சிகா, 2022ம் ஆண்டு டிசம்பரில், நீண்ட நாட்களாக நண்பராக இருந்த சோஹேல் கதூரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அரண்மனையில், சிறப்பாக நடைப்பெற்றது.

திருமணச் செய்தி வெளியாகியதும், சோஹேல் குறித்து இணையத்தில் பல்வேறு செய்திகள் பரவின. தொழிலதிபராக உள்ள சோஹேல் கதூரியா, ஹன்சிகாவின் தோழியின் கணவராக இருந்தவர் என்றும், அந்த தோழியை விவாகரத்து செய்த பின்பே ஹன்சிகாவை திருமணம் செய்துகொண்டார் என்றும் கூறப்பட்டது. மேலும், சோஹேலின் முதல் திருமண வாழ்க்கை முறிவுக்கு ஹன்சிகாதான் முக்கிய காரணம் என்பதும் இணையத்தில் செய்தியாக வெளியானது.
இது குறித்துப் பேசும் போது, ஹன்சிகா, “தோழியின் கணவரை அபகரித்தேன் எனும் செய்திகள் வெளியாகியதைப் பார்த்தபோது, நான் மிகவும் மனமுடைந்துவிட்டேன். அது உண்மையல்ல. அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்பதே உண்மை,” எனக் கூறி, கண்களில் கண்ணீருடன் பதிலளித்தார். திருமணத்திற்கு பிறகும் ஹன்சிகா தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது ஹன்சிகா தனது கணவரை பிரிந்து தாயுடன் வாழ்ந்து வருகிறார் எனும் தகவல் இணையத்தில் பரவி வருகிறது. திருமணமாகி சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதே காலம் முதலே இருவரும் ஒரே வீட்டில் வசிக்கவில்லை என்பதும் கூறப்படுகிறது. எனினும், இருவரது தரப்பிலும் இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.