பவர் ஸ்டார் பவன் கல்யான் நடித்திருக்கும் ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படம் மிகுந்த பிரம்மாண்டத்துடன் உருவாகியுள்ளது. இது பவன் கல்யாணின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வருவதால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இதை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்துள்ளார்.

ஜோதி கிருஷ்ணா மற்றும் கிரிஷ் ஜாகர்லமுடி ஆகியோர் இயக்கியுள்ள இந்தப் படத்தை மேகா ஸூர்யா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.எம். ரத்னம் தயாரித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கதாநாயகி நிதி அகர்வால், நடிகர்கள் சத்யராஜ் மற்றும் நாசர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசும்போது நடிகர் சத்யராஜ், “இந்த படத்தில் உண்மையான ஹீரோயின் நிதி அகர்வால் அல்ல. நான்தான் இந்த படத்தின் ஹீரோயின். பொதுவாக ஒரு படத்தில் ஹீரோவின் வேலை ஹீரோயினை காப்பாற்றுவது. இந்த படத்தில் பவன் கல்யான் என்னை காப்பாற்றுகிறார். அப்படி பார்த்தால், நியாயப்படி நான்தான் ஹீரோயின்” என நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.