நடிகரும், ஒளிப்பதிவாளருமான ‘நட்டி’ நட்ராஜ் தமிழ்ச் சினிமாவில் முதன்முதலாக 2002-ம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘யூத்’ படத்தில்தான் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். இந்தப் படத்தை இயக்கியவர் இயக்குநர் வின்சென்ட் செல்வா.
இந்தப் படத்தின்போது ஒரு ரீ டேக்கிற்காக விஜய்யிடம் பொய் சொல்லி கடைசியில் அவரிடத்தில் மாட்டிக் கொண்ட சம்பவத்தை ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ் தற்போது ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
“அன்றைக்கு ஒரு டூயட் பாடல் காட்சியை படமாக்கினோம். படமாக்கி முடித்த பின்புதான் டிரெஸ் கன்டினியூட்டி இல்லாமல் சில காட்சிகளைப் படமாக்கியது எங்களுக்குத் தெரிய வந்தது.
இப்போது மறுபடியும் அதே காட்சிகளை ரீ ஷூட் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. என்ன செய்வது என்று யோசித்தோம். இயக்குநர் வின்சென்ட் செல்வா பந்தை என் பக்கம் திருப்பிவிட்டார். “ஸார்.. நீங்க போய் விஜய்கிட்ட சொல்லுங்களேன்…” என்றார்.
சரி.. என்று இயக்குநருக்காக நான் விஜய்யிடம் சென்றேன். அவர் கிளம்பிக் கொண்டிருந்தார். “ஸார்.. அந்தப் பாட்டு சீனை மறுபடியும் எடுக்கணும்.. கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா..?” என்றேன். “ஏன்.. நல்லாத்தான இருந்துச்சு..?” என்றார் விஜய். “நல்லாத்தான் ஸார் இருந்துச்சு.. ஆனால் கொஞ்சம் லைட்டிங் பிராப்ளம்.. சரியா வரலைன்னு நினைக்கிறோம்…” என்று இழுத்தேன். “சரி.. ஈவினிங் ஆறு மணிக்குள்ள முடிச்சிருவீங்களா…?” என்றார் விஜய். “கண்டிப்பா முடிச்சிருவோம் ஸார்” என்றேன். “சரி.. வர்றேன்…” என்றார் விஜய்.
உடனேயே திரும்பவும் ஓடி வந்து முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்தினேன். முன்பேயே ஒரு தடவை காட்சிகளைப் படமாக்கிவிட்டதினால் இந்த முறை கேமிரா கோணம்.. லைட்டிங்ஸ் எல்லாத்தையும் பக்காவா வைச்சிருந்தோம். உடன் ஆடிய ஹீரோயினிடம் கன்டினியூட்டி டிரஸ்ஸை அணிவித்து அழைத்து வந்தோம்.
விஜய்யும் வந்தார். ரெண்டு பேரும் அதேபோல் ஆடிப் பாட.. ஷூட் வெற்றிகரமாக முடிந்தது. இயக்குநர் பேக்கப்பும் சொல்லிட்டார்.
இப்போது விஜய் ஸார் என்னை, “ஸார் கொஞ்சம் வர்றீங்களா.. பேசணும்..” என்றார். நான் அவர் அருகில் போய், “என்ன ஸார்..?” என்றேன். “இது நிஜமா உங்களால நடந்த பிரச்சினையா…?” என்றார் விஜய்.
நான்.. என்ன பதில் சொல்றதுன்னு தெரியாமல் நின்னேன். “நான் வந்தப்பவே பார்த்துட்டேன். அந்தப் பொண்ணு டிரெஸ்ஸை சேஞ்ச் பண்ணிட்டு வந்துச்சு.. பொய் சொல்லத் தெரிஞ்சாத்தான் ஸார் சொல்லணும்.. இல்லாட்டி சொல்லக் கூடாது.. உங்களுக்கு எதுக்கு இந்த வேலை..?” என்று லேசாக கண்டித்துவிட்டுப் போனார். இது விஜய் ஸாருடன் எனக்கு ஏற்பட்ட அனுபவத்திலேயே மறக்க முடியாதது…” என்கிறார் ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி நட்ராஜ்.