துணை நடிகராக பல படங்களில் தோன்றி, பெரும் போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை நடிகராக பிரபலமடைந்தவர் யோகி பாபு. அது மட்டுமின்றி பல படங்களில் நாயகனாகவும் நடித்துவிட்டார்.. இப்போதும் சில படங்களில் ஹீரோவாக நடிக்கிறார்.
கைகைவசம் சதுரங்க வேட்டை 2, அடங்காதே, ஜகஜால கில்லாடி, அந்தகன், பிஸ்தா என ஏகப்பட்ட படங்கள்.. நிற்க நேரமில்லாமல் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் தனது ஆதங்கத்தை ஒரு பேட்டியில் பதிவு செய்துள்ளார்:
“பெரும்பாலான படங்களில் நான் காமெடியனாகத்தான் நடிக்கிறேன். சில படங்களில் மட்டுமே ஹீரோவாக வருகிறேன். ஆனால் நான் காமெடியனாக சில காட்சிகள் வரும் படத்தில்கூட என்னை போஸ்டர்களில் பெரிதாக போட்டு ஹீரோ போல ஒரு தோற்றத்தைக் காண்பித்துவிடுகிறார்கள்.
தாதா 87 படத்தில் நிதின் சத்யாதான் ஹீரோ. ஆனால் போஸ்டர்களில் அவரது படத்தையே காணவில்லை. எங்கள் இருவருக்குமே இது வருத்தம்
அதே போலத்தான் விரைவில் வர இருக்கும் ஷூ படத்திலும் நடந்திருக்கிறது. படத்தின் இயக்குநர் கல்யாணண் என் நண்பர்தான். அவர் அழைக்கிறாரே என நான்கு நாட்கள் நடித்துக் கொடுத்தேன். அதாவது நான்கு இரவுகள். அவ்வளவுதான். படத்தின் ஹீரோ திலீபன்.
ஆனால் படத்தின் பிரமோசனில்.. போஸ்டர்களில் என் படத்தை பெரிதாக போடுகிறார்கள். பட வியாபாரத்துக்காக இப்படி செய்துவிடுகிறார்கள்.
இதுபோன்ற படங்கள் தோல்வி அடைந்துவிட்டால், அடுத்து நான் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு வியாபாரம் இருப்பதில்லை. ‘நீங்கள் ஹீரோவாக நடித்த முந்தைய படம் ஓடவில்லையே’ என்கிறார்கள்.
ஆகவே தங்களது வியாபாரத்துக்கா இப்படி போஸ்டர் அடிக்கும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது வழக்கு தொடுக்கப்போகிறேன்” என்று ஆவேசமாக கூறியிருக்கிறார் யோகிபாபு.
எல்லோரையும் சிரிக்கவைக்கும் நடிகரை ஏம்பா இப்படி கொந்தளிக்க வைக்கிறீங்க!