மலையாள நடிகர் டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்து, த்ரிஷா மற்றும் வினய் ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த “ஐடென்டிட்டி” திரைப்படம் ஜனவரி 2ஆம் தேதி வெளியானது. குற்றத் த்ரில்லர் பாணியில் உருவான இந்த திரைப்படம் வெளியானதைத் தொடங்கிய முதலே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவந்தது. இதனை முன்னிட்டு, நேற்று மாலை படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தனர்.
இந்த நிகழ்வின் போது பேசிய நடிகை த்ரிஷா, “நான் இதற்கு முன் நிறைய படங்களின் வெளியீட்டின்போது உங்களை சந்தித்திருக்கிறேன். ஆனால், இந்த முறை எனக்கு மிகவும் சிறப்பு, ஏனெனில் முதல் முறையாக மலையாளப் படத்திற்காக உங்களைச் சந்திக்கிறேன். என் கரியரில் மலையாள சினிமா மீது எனக்கு எப்போதுமே மிகுந்த மரியாதை இருக்கிறது. அவங்க படங்கள் எப்போதுமே வித்தியாசமாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்கும். ஒரு ஆண்டுக்கு ஒரு மலையாளப் படம் எப்படியும் நடிக்கணும்னு நினைத்தேன். அந்த நேரத்தில் இயக்குநர் அகிலை சந்தித்தேன். அவர் கதை சொன்ன விதம் மிகவும் அபாரம். டோவினோ பற்றி சொல்லவே வேண்டாம்; அவர் தான் ‘லக்கி ஸ்டார் ஆஃப் கேரளா’. வினையும் நானும் ‘என்றென்றும் புன்னகை’ படத்திலிருந்து நண்பர்களாக உள்ளோம்.
அந்தப் படம் காதல் மற்றும் நட்பைப் பற்றி இருந்தது. ஆனால் இந்தப் படம் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எப்போதுமே ஒரு படத்தின் படப்பிடிப்பு நேரம் மகிழ்ச்சியாக இருந்தால், அந்த படம் நிச்சயமாக நல்லதே ஆகும். நான் எப்போதுமே சொல்வது போல, படப்பிடிப்பு நேரம் பாதி வெற்றியை அடைவதைப் போன்றது. அதுபோலவே இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்தது, என்னால் அதை நல்ல அனுபவமாக அனுபவிக்க முடிந்தது. படம் வெளியாகிய பிறகு அதன் விமர்சனங்கள் மற்றும் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை யாரும் முன்பே அறிய முடியாது. ஆனால், இந்த படம் முதல் நாளிலிருந்தே நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. தற்போது தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. மேலும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்கள். இது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.
எப்போதுமே மலையாளம் மற்றும் தமிழ் சினிமா ஒருமித்து இருக்கும் என்று எனக்கு தோன்றும். ஏனெனில் மோகன்லால் சார், மம்முட்டி சார், நிவின் பாலி போன்றவர்களும் தமிழில் தொடர்பில் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள். இதேபோல், இங்கு உள்ள நடிகர்களும் மலையாள சினிமாவைப் பார்ப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். இது ஒரு நல்ல விஷயம். இந்தப் படத்தில் நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. புத்தாண்டை வெற்றியுடன் தொடங்குவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார் த்ரிஷா.