தனது இனிமையான குரலில் பல மொழி ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தவர் எஸ்.ஜானகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். பல பாடல்களைத் தானே எழுதி, இசையமைத்து பாடியிருக்கிறார். இதுவரை நான்கு முறை தேசிய விருது பெற்றவர்.
சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜானகியிடம் தொகுப்பாளர் நீங்கள் கஷ்டப்பட்டு பாடிய பாடல் எது என்று கேட்டார். அதற்கு அவர் ஹேமாவதி என்ற கன்னட படத்தில் எல்.வைத்தியநாதன் இசையில் இரண்டு ராகங்கள் கலந்து வரக்கூடிய பாடல் அது. ஒரு வரி ஒரு ராகத்திலும் இன்னொரு வரி வேறு ராகத்தில் பாட வேண்டும். பாடலின் கடைசி வரி ’ஸ்வரம்’ வேகமாக பாட வேண்டும் அது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.
பயிற்சி பத்து முறை செய்தால் கூட அந்த கடைசி வரி பாடுவது சிரமம். அந்த சூழ்நிலையில் தியாகராஜர் மற்றும் ராகவேந்திர ஸ்வாமி கிட்ட வேண்டிக்கொண்டேன். நான் இந்த பாடலை நன்றாக பாடிவிடவேண்டும். இரண்டு பேருக்கும் ஆளுக்கு ரூ.100 தருகிறேன் என்றேன். அந்த பாடல் தான் நான் கடவுளுக்கு லஞ்சம் கொடுத்து பாடிய பாடல் என அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார் எஸ்.ஜானகி.