நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கே. பாலச்சந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் மூலம் அவர் 1975 ஆகஸ்ட் 15 ஆம் தேதி சினிமாவில் அறிமுகமானார். கடந்த 50 ஆண்டுகளில் ரஜினிகாந்த் இதுவரை மொத்தம் 171 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சூப்பர் ஸ்டாராக உயர்ந்த அவர், இருமுறை பத்ம விபூஷன் விருது, இந்திய திரையுலகின் மிக உயர்ந்த தாதா சாகேப் பால்கே விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சூப்பர் ஸ்டார் ரஜினி திரையில் தோன்றும் போதெல்லாம் அரங்கமே அதிரும் என்பதை நான் சென்னையில் பலமுறை பார்த்திருக்கிறேன். தலைமுறைகள் மாறினாலும் அந்த மகிழ்ச்சி குறையவில்லை. இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தை வென்ற உச்ச நடிகர் ரஜினிகாந்த், ஒரு நடிகராக ஐந்து தசாப்தங்களை நிறைவு செய்துள்ளார் என்பது மகிழ்ச்சிக்குரியது. திரை வாழ்க்கையின் பொன்விழாவை கொண்டாடும் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.