Friday, November 22, 2024

“சூரியை ஏமாற்றித்தான் நான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை” – கொதிக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூரியுடன் பணப் பிரச்சினை, கோர்ட்.. வழக்கு.. சொந்த வாழ்க்கையில் விவகாரத்து… ஆந்திர பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டாவுடன் காதல்.. வீடு இருக்கும் குடியிருப்பில் அக்கம், பக்கத்தினருடன் மோதல்.. என்ற பலவித சர்ச்சைகள் நடிகர் விஷ்ணு விஷாலை சூழ்ந்திருக்கும் நிலையில் அவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் காடன்’ திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமையன்று திரைக்கு வருகிறது.

இதையொட்டி நடிகர் விஷ்ணு விஷால் இன்று மதியம் சென்னையில் உள்ள கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது தன்னைச் சுற்றியிருக்கும் பல விஷயங்களைக் குறித்து விஷ்ணு விஷால் மனம் திறந்து பேசினார்.

“சிறிய இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். இந்த ஆண்டில் நான் நடித்த மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன.

826 நாட்களுக்குப் பிறகு நான் நடித்த காடன் திரைப்படம் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து என்னுடைய தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘எஃப்.ஐ.ஆர்.’ படம் வெளியாகவிருக்கிறது.

தற்போது நான் நடித்து வரும் படங்களில் ‘மோகன்தாஸ்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறேன். ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறேன். ‘ஜீவி’ படத்தை இயக்கிய இயக்குநர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். வேறு சில படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

திறமைசாலி என்பதை நிரூபிப்பதற்காகவே திரைத்துறையில் நீடித்திருக்கிறேன். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘கதாநாயகன்’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என்று தொடர்ச்சியாக சில கமர்சியல் படங்களை தயாரித்தேன். இதில் வெற்றியும் கிடைத்தது. தோல்வியும் கிடைத்தது.

அதன் பிறகு வெளியான ‘ராட்சசன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அது போன்ற உள்ளடக்கத்துடன் கூடிய திரைக்கதையை நாமே தயாரிக்கலாம் என்ற எண்ணத்துடன்தான் தற்போது ‘எஃப்.ஐ.ஆர்.’, ‘மோகன்தாஸ்’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறேன்.

அதற்கடுத்து மீண்டும் சொந்த பட நிறுவனம் சார்பாக புதிய படம் தயாரிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் தன்னம்பிக்கையுடன் பணியாற்றக் காத்திருக்கிறேன்…” என்றார் விஷ்ணு விஷால்.

தொடர்ந்து சூரி தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் குறித்துப் பேசும்போது, “இந்த விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் இது குறித்து விரிவாக பதிலளிக்க இயலாது. இருப்பினும் எனக்கோ என்னுடைய தந்தைக்கோ சூரியின் நிலம் தொடர்பான பண பரிவர்த்தனை விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லை என்பதுதான் உண்மை.

இந்த விவகாரத்தில் நான் நேர்மறையாக இருக்க விரும்புகிறேன். இது தொடர்பாக என்னால் அதிகமான விவரங்களை தெளிவாக தர இயலும். சூரி கொடுத்த புகாரில் உள்ள ஒவ்வொரு விஷயங்களுக்கும் என்னால் விளக்கம் கொடுக்க இயலும். அதன் பிறகு அவருடைய இருண்ட பக்கங்களை விளக்க வேண்டியதாக இருக்கும். இதன் காரணமாக அவருக்கும் எனக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

சில ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தந்தையின் காலில் விழுந்து வணங்கி, ‘நீங்கள்தான் என்னுடைய கடவுள்’ என்று சொன்ன ஒருவர், தற்போது என் மீதும், என்னுடைய தந்தை மீதும் புகார் அளித்திருக்கிறார்.

கொரோனா காலகட்டத்தில் என்னுடைய தந்தையை வெளியே அனுப்பாமல் பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தேன். ஆனால் சூரியின் புகாரின் காரணமாக அவர் வழக்கறிஞர்களை சந்திப்பதற்கும், நீதிமன்றத்திற்கும் அலைய வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கி விட்டார். இதை ஒரு மகனாக பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இருப்பினும் இறுதியில் உண்மை ஒருநாள் வெளியே வந்தே தீரும்.

ஒன்று மட்டும் உறுதியாக கூறுகிறேன். சூரி மூலமாகத்தான் நான் சம்பாதித்து சாப்பிட வேண்டும் என்ற நிலை எனக்கில்லை.  என்னுடைய தந்தை கூலி வேலை செய்து, மாடு மேய்த்து, கடினமாக உழைத்து, படித்து அதன் பிறகு போலீஸ் அதிகாரியாக உயர்ந்திருக்கிறார்.

சூரி விவகாரத்தால் அப்பா சம்பாதித்து வைத்த நற்பெயருக்கு நான்தான் களங்கம் கற்பிக்கிறோனோ என்ற ஒரு சங்கடமான எண்ணம் எனக்குள் இருக்கிறது.

இருந்தாலும் அப்பா சட்டம் ஒழுங்கு பிரிவில் 27 ஆண்டு காலம் போலீஸ் அதிகாரியாக பல இடங்களில் பணியாற்றியுள்ளார். அவரின் நேர்மையான பணிக்கு கிடைத்த மரியாதையை நினைத்து நான் தற்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

சூரியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள். அதனை முழுமையாக நம்பி எங்கள் மீது புகார் அளித்திருக்கிறார். உண்மை ஒரு நாள் தெரிய வரும்பொழுது அவர் எங்களை பற்றி உணர்ந்து கொள்வார்…” என்று சொல்லி முடித்தார் நடிகர் விஷ்ணு விஷால்.

- Advertisement -

Read more

Local News