Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

“ஒரு கைதியின் டைரி’ இந்தி பதிப்பில் கிளைமாக்ஸை மாற்றினேன்” – இயக்குநர் கே.பாக்யராஜ் சொன்ன ரகசியம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பி.ஜி.எஸ். புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.ஜி.எஸ். மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி.ஆனந்த் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 3.6.9.  

இயக்குநர் சிவ மாதவ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “நான் கொஞ்சம் பிடிவாதக்காரன் என்று இங்கே சொன்னார்கள். அது உண்மைதான். நல்ல விஷயத்திற்காக எப்போதும் நான் பிடிவாதமாகத்தான் இருப்பேன்.

நான் கதை எழுதிய ஒரு கைதியின் டைரி’ படத்திற்காக நான் எழுதிய கிளைமாக்ஸ் வேறு.. ஆனால் பட்ஜெட் உள்ளிட்ட சில காரணங்களாலும் எனது குருநாதர் பாரதிராஜாவுக்கு அது பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்பதாலும் வேறு மாதிரியான கிளைமாக்ஸ் வைத்து படமாக்கி படமும் ஹிட்டானது. அந்த கிளைமாக்ஸும் பேசப்பட்டது.

ஆனால், அதே படத்தை இந்தியில் அமிதாப்பச்சனை வைத்து நான் இயக்க முடிவு செய்தபோது படத்தின் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பலரும் என்னிடம் வந்து, “தமிழில் எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சியையே இந்தியிலும் எடுங்கள்.. அமிதாப்பச்சனுக்கு அதுபோன்ற ஒரு கிளைமாக்ஸ் ரொம்பவே கம்பீரமாக இருக்கும்” என்று கூறினார்கள். ஆனால், நான் எழுதி வைத்த கிளைமாக்ஸை படமாக்கியே தீர்வது என்று உறுதியாக இருந்தேன்.

இது குறித்து படத்தின் ஹீரோவான அமிதாப் பச்சனிடமே நேரடியாக பேசியபோது,  அவர் என் எண்ணங்களை புரிந்து கொண்டு ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒரு காட்சியுடன், “நீங்கள் மனதில் நினைத்து வைத்திருக்கும் ஒரு காட்சியை எப்படி ஒப்பிட முடியும்? அதனால் நீங்கள் நினைத்தபடி விரும்பிய கிளைமாக்ஸ் காட்சியை எடுங்கள்” என ஒப்புக் கொண்டார்.

அந்தக் காட்சியை படமாக்கி முடித்த பின்புதான் அனைவரும் அதை பார்த்து வியந்து பாராட்டினார்கள். அந்தப் படத்தின் கிளைமாக்ஸை பார்த்து விட்டு என்னுடைய குருநாதர் பாரதிராஜா வியந்து போய் என்னைப் பாராட்டினார். அதுபோல ஒரு நல்ல விஷயம் வரவேண்டும் என்பதற்காக பிடிவாதமாக இருப்பது தவறில்லை.

இப்போது யாருமே முழுதாக சினிமாவை கற்றுக்கொண்டு உள்ளே நுழைவதில்லை. பல விஷயங்களை இங்கேதான் தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும். இந்தி படப்பிடிப்பின் போதும் எனக்கு பல விஷயங்கள் புரியாமலேயே அந்த சமயத்தில் அங்கேதான் கற்றுக் கொண்டு அந்த படத்தை முடித்தேன்.

அதுபோல இந்தப் படத்தின் இயக்குநரான சிவ மாதவ்வும் இந்தப் படத்தை தான் நினைத்தபடி மிக நேர்த்தியா, பிடிவாதமாக இருந்து செதுக்கி உள்ளார். அந்த வகையில் நிச்சயம் இந்தப் படம் அனைவராலும் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை…” என்று பாராட்டினார்.

- Advertisement -

Read more

Local News