Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தின் ‘வச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள’ பாடல் காட்சி படமானது எப்படி..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் 1984-ம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றத் திரைப்படம் ‘நல்லவனுக்கு நல்லவன்’.

இத்திரைப்படத்தை ஏவி.எம். நிறுவனம் தயாரிக்க.. இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தில் ‘வச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள’ என்ற பாடல் மிகப் பிரபலமானது. இந்தப் படம் வெளியான காலக்கட்டத்தில் அனைத்து மெல்லிசைக் கச்சேரிகளிலும் இந்தப் பாடல் பாடப்பட்டது. அப்போதைய ஆடல், பாடல் விழாக்களிலும் இந்தப் பாடலுக்கு நடனக் கலைஞர்கள் நடனமாடுவதை பெரிதும் விரும்புவார்கள். அந்த அளவுக்கு இசையும், பாடலும் இனிமையாக அமைந்திருந்தது.

படத்திலும் இந்தப் பாடலை மிக, மிக வித்தியாசமானதாக அமைத்திருந்தார் இயக்குநர் எஸ்.பி.எம். கிட்டத்தட்ட 100 டிவிக்களின் பின்னணியில் ஒரு அரங்கத்தில் இந்தப் பாடல் காட்சியைப் படமாக்கியிருந்தார் எஸ்.பி.எம். இந்தப் பாடல் காட்சியில் ரஜினியோடு அப்போது பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருந்த கல்பனா ஐயர் நடனமாடியிருந்தார்.

இந்தப் பாடல் காட்சி அவ்வளவு எளிதாகப் படமாகிவிடவில்லை. மிகுந்த சிரத்தையெடுத்து, பல கஷ்டங்களிக்கிடையில்தான் இந்தப் பாடல் காட்சி படமானதாக இந்தப் பாடல் காட்சியைப் படமாக்க உதவிய தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தற்போது கூறியுள்ளார்.

அவர் இது குறித்து அளித்த ஒரு பேட்டியில், “நல்லவனுக்கு நல்லவன்’ படம் தயாராகிக் கொண்டிருந்த சூழலில் ஒரு நாள் தயாரிப்பாளர் எம்.எஸ்.குகன் ஸார் என் வீட்டுக்கு திடீர்ன்னு என்னைப் பார்க்க வந்தார். அப்போது நான் பெங்களூருக்கு ஒரு வேலையாக கிளம்பிக் கொண்டிருந்தேன்.

வந்தவர், “நல்லவனுக்கு நல்லவன்’ படத்துக்காக ஒரு செட் போட்டு பாட்டு சீன் ஷூட் பண்ணிக்கிட்டிருக்கோம். அதுல பேக்கிரவுண்ட்ல 100 டயனோரா டிவிக்களை வைச்சிருக்கோம். அதுல கரெக்ட்டா செட்டாக மாட்டேங்குது. 3 நாளாச்சு.. போராடிக்கிட்டிருக்கோம். நீங்க வந்து என்னன்னு சரி பண்ணிக் கொடுங்க”ன்னு சொன்னார்.

நான் பெங்களூர் போயிட்டு திரும்பியதும் நேரா ஏவி.எம். ஸ்டூடியோவில் இருந்த இந்தப் பாடல் செட்டுக்குத்தான் போனேன். அப்போது அங்கேயிருந்த பிரச்சினை பாடல் காட்சியைப் படமாக்கும்போது அதே காட்சி பின்னாடியிருக்குற எல்லா டிவிலேயும் தெரியணும். இதுதான் கான்செப்ட். ஆனால், பல டிவிக்களில் ஒளியமைப்பு மாறி, மாறி இருந்ததால் எதுவுமே சரியா வரலை.

கேமிராமேன் பாபுவும் நானும் உக்காந்து பேசி இதைச் சரி செய்யப் பிளான் பண்ணோம். முதல்ல 100 டிவிக்களோட ஒளியமைப்பை ஒரே மாதிரி மாத்தி வைச்சோம்.

அதுக்கப்புறம் என்கிட்ட இருந்த ஒரு வீடியோ கேமிரால ரஜினியும், கல்பனா ஐயரும் நடனமாடுறதை நானே படமாக்கினேன். அதை அப்படியே லைவ்வா அந்த 100 டிவிக்கள்லேயும் அதே அரங்கத்துல ஒளிபரப்பினோம்.

இப்போ இது இரண்டையுமே ஒளிப்பதிவாளர் பாபு தன்னோட சினிமா கேமிரால பதிவாக்கினாரு. இந்தப் பாடல் காட்சியை தொடர்ச்சியாக நாலு நாட்கள் படமாக்கி முடித்தோம்.

இன்றைக்கும் இந்தப் பாடல் காட்சி ஒரு புதுமையான அனுபவத்தை சினிமா ரசிகர்களுக்குக் கொடுக்குதுன்னா அதுக்கு முதல் காரணம் எஸ்.பி.முத்துராமன் ஸாரோட கிரியேட்டிவ்வும், பாடலும், இசையும்தான். இதில் என்னுடைய பங்கும் இருக்குன்றதுல எனக்கு இன்னிக்கும் பெருமைதான்..!” என்றார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.

- Advertisement -

Read more

Local News