அறிமுக இயக்குநர் தரணி ராசேந்திரன் உருவாக்கத்தில் சேயோன், சக்தி மித்ரன், ராஜலக்ஷ்மி, குருசோம சுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘யாத்திசை’. கடந்த ஏப்ரல் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரேற்பை பெற்றது.
பாண்டியர் – எயினர் குல வரலாற்றை புனைவு கலந்து சொல்லியிருக்கும் இப்படத்தை வீனஸ், சிக்ஸ் ஸ்டார் ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன.
தற்போது இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர், யாத்திசை படத்தை புகழ்ந்து கருத்து தெரிவித்து உள்ளனர்.
நடிகர் பசுபதி, “படம் பார்த்து இரண்டு மாதம் ஆனது இன்னம் அந்த பிரம்மிப்பிலிருந்து வெளிவர முடியவில்லை. ஏன் தமிழ் சினிமாவால் இது போன்ற படங்களை எடுக்க முடியவில்லை. நான் பார்க்கும் அனைவரிடமும் யாத்திசை பற்றி பேசுகிறேன்” என்று கூறியுள்ளார்.
நடிகர் நாசர், “யாத்திசை சிறந்த படம். தமிழ் சினிமாவில் மிக முக்கியமான முயற்சி” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன், “யாத்திசை திரைப்படம், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருக்கிறது. இயக்கம், ஒளிப்பதிவு, இசை, நடிப்பு என அனைத்துமே ஹாலிவுட் தரத்தில் உள்ளது. ஒட்டுமொத்த படமே, புதுமையாகவும் பிரம்மிப்பாகவும் இருந்தது” என தெரிவித்து உள்ளார். .
இயக்குநர், நடிகர் சமுத்திரகனி, “ஆகச்சிறந்த முயற்சி , தரமான வெற்றி” என்று சொல்லி இருக்கிறார்.
நடிகை ரோகிணி, “இது ஒரு தைரியமான டிரெண்ட் சென்ட்டர்.. மிகமிக மெனக்கெடலோடு, ஆய்வு செய்து உருவாக்கப்பட்ட படம். அந்தக் காலத்தில் இப்படிப்பட்ட வாழ்க்கைதான் இருந்திருக்க முடியும் என்று ஆய்வாளர்களின் துணையுடன் படத்தை, உண்மைக்கு அருகில் கொடுத்துள்ளார் இயக்குநர்.
மிகப்பெரிய பட்ஜெட் இல்லாமலேயே பிரம்மாண்டமாக உருவாக்கி உள்ளார்.
அதிகாரம் என்பது நம்மை என்ன மாதிரி மாற்றுகிறது என்பதையும்.. போருக்கு பின் உள்ளது என்ன என்பதையும் சிறப்பாக உணர்த்தி உள்ளார்.
அந்த அதிகாரத்தை அடைய என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருந்தார்கள் என்று வெளிப்படுத்தி உள்ளார். இப்போதும் அப்படிப்பட்டவர்கள்தானே இருக்கிறார்கள்!” என்று தனது கருத்தை பதிவு செய்து உள்ளார்.
இயக்குநர் பாலாஜி சக்திவேல், “இந்தத் திரைப்படம் யாரும் கற்பனை செய்யாத முயற்சி. இந்த படத்தை நாம் பெரிய அளவில் கொண்டாபடவில்லையே என்ற குற்ற உணர்ச்சி ஏற்பட்டு விட்டது” என்றார்.
இயக்குநர் சசி, “இது – நேர்மையான முயற்சி. இது போல் பார்த்தவில்லை” என்று கூறினார்.
இந்நிலையில் படத்தின் இயக்குநர் தரணி ராஜேந்திரன், “பலரது பாராட்டு – அதுவும் தேர்ந்த திரைக்கலைஞர்கள் தொடர்ந்து பாராட்டுவது – மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிக்கிறது. அதே போல, ஓ.டி.டி.யில் யாத்திசை திரைப்படம் மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது.
இந்த உற்சாகத்துடன் அடுத்த பட வேலைகளில் ஈடுபட்டு உள்ளேன். விரைவில் அது குறித்த அறிவிப்பு வரும்” என்று தெரிவித்து உள்ளார்.

