இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர், பாடகர் என பல்துறை திறமைகளை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. திரைப்படங்களுக்குப் பதில் சில நேரங்களில் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். விரைவில் அவர் உலகளாவிய இசை சுற்றுப்பயணத்திற்கு செல்ல உள்ளார். மேலும், பண்டைய தமிழர்களின் பண்பாடு, நாகரிகம் மற்றும் கலாச்சாரம் குறித்து அகழ்வாராய்ச்சி செய்து வருகிறார். இதன் அடிப்படையில் ஒரு ஆவணப்படத்தையும் உருவாக்கியுள்ளார். இந்த Porunai ஆவணப்படம் விரைவில் வெளியிடப்படும்.

இந்த நேரத்தில், செய்தியாளர்களிடம் பேசிய ஆதி, “நடிப்பு மற்றும் இசை இரண்டையும் நான் சிரமமாகவே நினைக்கவில்லை. இதுவே எனது வாழ்க்கையின் ஆசை. நடிப்பு மற்றும் இசை இரண்டும் வெவ்வேறு. இசையுடன் ஒப்பிடும்போது, நடிப்பில் சிறிது சிரமம் உள்ளது, ஏனெனில் அதற்காக அதிகமான முயற்சி தேவைப்படுகிறது. ஆனால் இசை எனக்குள்ளேயே இருப்பதால் அது சுலபமாக இருக்கிறது.
ஒரு காலத்தில் ஆல்பம் என்றால் என்னவென்று மக்கள் கேட்டனர். ஆனால் இன்று சினிமா பாடல்களுக்கு இணையாக ஆல்பம் பாடல்களும் மக்களிடையே வரவேற்பு பெறுகின்றன. எதிர்காலத்தில் வெளிநாடுகள் போல் இங்கும் ஆல்பம் பாடல்களுக்கு தனியான ஒரு துறை உருவாகும். அடுத்து ‘ஜோ’ பட இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கும் படத்தில் நான் ஒரு கிரிக்கெட் வீரராக நடிக்கிறேன். இதற்காக கடந்த மூன்று மாதங்களாக கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறேன். படப்பிடிப்பு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தொடங்கும். மேலும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்கான பாடல் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. ஒரு பாடல் ஏற்கனவே தயாராகி விட்டது” என்றார்.