Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

தங்கர்பச்சானுடன் ஜி.வி.பிரகாஷ் இணையும் ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மனித உறவுகளை மய்யமாகக் கொண்ட ‘அழகி’, ‘சொல்ல மறந்த கதை’, ‘தென்றல்’, ‘பள்ளிக்கூடம்’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ போன்ற தரமான அழுத்தமான திரைப்படங்களை தந்த இயக்குநர் தங்கர்பச்சான் தற்போது புதிய திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். அதற்கு ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ என்று பெயரிட்டுள்ளார்.

இப்படத்தை, வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் D.வீரசக்தி பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கிறார்.

இப்புதிய படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகிய மூவருமே இதுவரை நடித்திராத அழுத்தமான கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்கள். மற்றொரு முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகையைத் தேடி வருகிறார்கள்.

மிக முக்கியமாக இப்படத்தின் இசை அமைக்கும் பொறுப்பை ஜி.வி.பிரகாஷ் ஏற்றுள்ளார். இவர் முதன்முறையாக தங்கர்பச்சானுடன் இணைந்து பணிபுரிகிறார்.

ஒளிப்பதிவு – N.K.ஏகாம்பரம், கலை இயக்கம் – முத்துராஜ் தங்கவேல். பத்திரிகை தொடர்பு – ஜான்ஸன், எழுத்து, இயக்கம் – தங்கர்பச்சான்.

வரும் ஜூலை 25-ம் தேதி முதல் இரு கட்டங்களாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.  

இத்திரைப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பிறர் அறியாத பெரிய தவறு ஒன்றை செய்துவிட்டு குற்ற உணர்வில் நிம்மதி இழந்து மன்னிப்புத் தேடி அலைபவனின் மனநிலைக்கு ஏற்ப பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வைரமுத்து, “தங்கர்பச்சான் இயக்க ஜி.வி.பிரகாஷ் இசைக்கும் படம் ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ பாட்டெழுதும்போதே சொல்லோடு கசிந்தது கண்ணீர். விழுமியங்கள் மாறிப் போன சமூகத்திற்கு என்னோடு அழுவதற்கு கண்ணீர் இருக்குமா? இல்லை.. கண்களாவது இருக்குமா?..” என தனது அழுத்தமான மன உணர்வுகளை பதிவிட்டுள்ளார்.

படத்தின் தயாரிப்பாளரான D.வீரசக்தி இப்படம் குறித்து பேசும்போது, “மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அற்புதமான படைப்பு இது. இக்கதையை கேட்ட மாத்திரத்திலேயே கண்ணீர்விட்டு அழுதுவிட்டேன். அடுத்த நொடியே படத்தை தயாரிக்க முடிவெடுத்துவிட்டேன். இது தங்கர்பச்சானின் அழுத்தமான மற்றொரு படைப்பு. தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு படமாக இது இருக்கும்..” என்றார்.

தங்கர்பச்சான் இயக்கத்தில் அவரது மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் டக்கு முக்கு டிக்கு தாளம்’ திரைப்படத்தின் வெளியீட்டு பணிகளுக்கிடையில் இப்புதிய திரைப்படத்தின் பாடல்களை உருவாக்கும் பணிகளை துவக்கியுள்ளார் தங்கர்பச்சான்.

- Advertisement -

Read more

Local News