Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

“ஜென்டில்மேன்’ படம் கவியரசர் கண்ணதாசனின் ‘கருப்புப் பணம்’ படத்தில் இருந்து உருவானதுதான்…”

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“ஜென்டில்மேன்’ திரைப்படத்தின் கதை, கவியரசர் கண்ணதான் தயாரித்து, நடித்த ‘கருப்புப் பணம்’ படத்தில் இருந்து எடுக்கப்பட்டதுதான்…” என்று கவியரசர் கண்ணதாசனின் மகனும், பாடலாசிரியர், வசனகர்த்தாவுமான கண்மணி சுப்பு கூறியுள்ளார்.

1993-ம் ஆண்டு அர்ஜூன், மதுபாலா நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான படம் ஜென்டில்மேன்’. நன்கு படித்திருந்தும் இட ஒதுக்கீடு காரணமாக கல்லூரியில் படிக்க வாய்ப்பில்லாமல் போனதால் கோபமடையும் நாயகன் அர்ஜூன், முறைகேடாக பணம் சம்பாதித்து பதுக்கி வைத்திருக்கும் பணக்காரர்களிடத்தில் கொள்ளையடித்து அதனை ஏழைகளிடம் கொடுப்பதுதான் இந்த ‘ஜென்டில்மேன்’ படத்தின் கதை.

இந்தக் கதையில் ‘பணக்காரர்களிடத்தில் கொள்ளையடித்து ஏழைகளுக்கு வழங்குவது’ என்ற ‘ஜென்டில்மேன்’ படத்தின் மையக் கருத்து கவியரசு கண்ணதாசனின் ‘கருப்புப் பணம்’ படத்தில் இருந்து கையாளப்பட்டிருக்கிறது என்று கவியரசர் கண்ணதாசனின் மகனான கண்மணி சுப்பு கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்ட கண்மணி சுப்பு, “ஜனநாயக சோஷலிஸ சிந்தாத்தை மக்களுக்குச் சொல்வதற்காக ஒரு படத்தை உருவாக்க நினைத்தார் அப்பா. அதுதான் இந்தக் கருப்புப் பணம்’ திரைப்படம். இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க யாரும் முன் வர மாட்டார்கள் என்பது தெரிந்ததால் அப்பாவே நாயகனாக நடித்தார்.

‘ஜனநாயக சோஷலிஸம்’ என்பது ‘பணம் எந்த இடத்திலும் தேங்கக் கூடாது. பதுக்கல் கூடாது. பணம் எல்லா சமூகத்தினருக்கும் கிடைக்க வேண்டும்’ என்பதுதான். அப்போது அப்பா இருந்த காலக்கட்டத்தில் கருப்பு சந்தை, கருப்புப் பணமெல்லாம் இருந்தது. அதை உணர்த்துவதற்காகத்தான் அப்பா அந்தக் ‘கருப்புப் பணம்’ படத்தை எடுத்தார்.

அப்படியெடுக்கும்போது அப்பட்டமா அந்த சிந்தாத்தத்தை சொல்ல முடியாது அல்லவா..? அதுக்காக அவருக்கு ஒரு கதை தேவைப்பட்டது. அவரே நாயகனா நடிச்சதால, நான் சின்ன வயசுல நிறைய படிக்கணும்ன்னு நினைச்சேன். ஆனால் பணமில்லாததால் என்னால் படிக்க முடியலை. அதனால் யார், யாரெல்லாம் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைச்சிருந்தாங்களோ.. அவங்ககிட்டேயெல்லாம் பணத்தைக் கொள்ளையடித்து ஏழை மக்களுக்கு படிப்புக்காக கொடுத்தேன். பள்ளிக் கூடம் கட்டினேன். கல்லூரிகளை கட்டினேன். இதெல்லாம் தப்பா…?’ன்னு படத்தின் கிளைமாக்ஸ்ல கேட்பார்.

சுருக்கமா சொல்லணும்ன்னா இந்தப் படத்தின் மையக் கரு என்னவென்றால், கருப்புப் பணம் வைத்திருப்பவர்களிடத்தில் பணத்தைக் கொள்ளையடித்து ஏழை, எளிய மக்களிடத்தில் அவர்கள் படிப்பதற்காகக் கொடுப்பது. இதைத்தான் ‘ஜென்டில்மேன்’ படத்தில் வைத்திருக்கிறார்கள். அப்படியே வைத்தால் சரி வராது என்பதால்தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநீதி.. இட ஒதுக்கீடு என்று சிலவற்றையும் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.

எப்படிப் பார்த்தாலும் எங்க அப்பாவின் கருப்புப் பணம்’ படத்தின் இன்ஸ்பிரேஷன்தான் ஜென்டில்மேன்’ படம். இதில் எனக்கு சந்தேகமில்லை. அப்போதே திரையுலகில் பல பேர் என்னிடம் இதைப் பற்றிச் சொன்னார்கள். ‘ஜென்டில்மேன்’ படத்தின் கதை, உங்க அப்பாவோட கருப்புப் பணம்’ படத்தின் கதைதான் என்றார்கள். ஆனால், கோர்ட், வழக்கு என்று போக எனக்கு விருப்பமில்லை. அதனால்விட்டுவிட்டேன்..” என்றார்.

- Advertisement -

Read more

Local News