‘காந்தாரா’ படத்தின் வசூல் ‘பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளியிருப்பதாக திரைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கன்னட மொழியில் உருவான ‘காந்தாரா’ திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது. ‘கே.ஜி.எஃப்.’ படங்களை தயாரித்த ‘ஹோம்பலே பிலிம்ஸ்’ நிறுவனம் இந்தக் ‘காந்தாரா’ படத்தை தயாரித்துள்ளது. இதனை ரிஷப் ஷெட்டி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து மற்ற மொழிகளில் இதனை டப்பிங் செய்து வெளியிட்டார்கள். தமிழில் இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ‘காந்தாரா’வின் தெலுங்கு டப்பிங் வெர்ஷன் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது. இதனால் படத்தை தயாரித்த ஹோம்பலே நிறுவனமே திகைப்பில் உள்ளது. தெலுங்கு வெர்ஷனில் மட்டும் இந்தப் படத்திற்கு 45 கோடிக்கும் அதிகமாக கலெக்சன் ஆகியுள்ளது. இது ‘பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’ படங்களின் தெலுங்கு வெர்ஷன் வசூலைவிட அதிகமாகும்.
கர்நாடகத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படமாக ‘காந்தாரா’ மாறியுள்ளது. அந்த வகையில் ‘கே.ஜி.எஃப்.-2’ படத்தின் சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தீபாவளியையொட்டி ‘பிரின்ஸ்’, ‘சர்தார்’ ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. அந்த நேரத்தில் குறைவான திரையரங்குகளில் ‘காந்தாரா’ படம் திரையிடப்பட்டிருந்தது. ‘பிரின்ஸ்’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ‘காந்தாரா’ படத்திற்குக் கூடுதல் தியேட்டர்கள் கிடைத்துள்ளது. இதனால் காந்தாரா படம் தற்போது தமிழ்நாட்டில் 100 தியேட்டர்களுக்கும் மேல் திரையிடப்பட்டுள்ளது.
தற்போது தமிழக திரையரங்குகளில் ‘சர்தார்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘காந்தாரா’ ஆகிய 3 படங்கள்தான் அதிக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.