கங்கை அமரன் 1979 ஆம் ஆண்டு வெளியான கரைகடந்த குறத்தி என்ற படத்தின் மூலம் தான் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவர் கடைசியாக 2010 ஆம் ஆண்டு வெளிவந்த புகைப்படம் என்ற படத்தில் இசையமைத்திருந்தார். மேலும், இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் இயக்குனரும் ஆவார். பிரபு சுரேஷ் நடித்த கோழி கூவுது என்ற படத்தில் மூலம் தான் இவர் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
அதை தொடங்கி இவர் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். குறிப்பாக, இவர் இயக்கிய கரகாட்டம் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.
இவருக்கும் இவரது அண்ணனும், இசை அமைப்பாளருமான , இளையராஜாவிற்கும் இடையே பல ஆண்டு காலமாக பனி போர் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இருவரும் எந்த குடும்ப நிகழ்ச்சியிலும் சந்தித்துக் கொண்டதும் இல்லை.
இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டனர். அது இரு வீட்டாருக்கும் மகிழ்ச்சியை அளித்து இருந்தது. இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது.
இந்நிலையில் தான் இசையமைப்பாளராக ஆனதற்கு இளையராஜா செய்த காரியம் குறித்து கங்கை அமரன் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.
அதில் அவர், “என்னுடைய நண்பர் மலேசியா வாசுதேவன் கதையில் ஒரு படம் உருவாக இருந்தது. அந்த படத்தில் அவர்தான் கதாநாயகன். இசை யாரை இசையமைக்க வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது இளையராஜா என்று பேசிட்டு கொண்டிருந்தார்கள்.
ஆனால், மலேசியா வாசுதேவன் இளையராஜா வேண்டாம். அவர் மிகவும் காஸ்ட்லி. அவர் போடும் டியூன் எல்லாம் கங்கை அமரன் தான் கொடுக்கிறார். அதனால் அவரைப் போடுவோம் என்று சொல்லி பிக்ஸ் பண்ணிட்டு என்னிடம் வந்து சொன்னார்கள்.
ஆனால், எனக்கு மியூசிக் பத்தி ஒன்னுமே தெரியாது என்று சொல்லியும் அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம். ஒரு புரொடியூசர் கிடைச்சிருக்காரு வா என்று சொல்லி என்னை அழைத்துச் சென்றார். அங்கே போயிட்டு அட்வான்ஸ் எல்லாம் வாங்கிட்டேன். இந்த விஷயம் செய்தித்தாளில் எல்லாம் வந்துவிட்டது.
கங்கை அமரன் இசையமைப்பாளர் என்ற செய்தியை என் அண்ணன் இளையராஜா பார்த்துவிட்டார்.
‘என்னடா இசையமைக்க போறியாமே?’ என்று கேட்டார். ‘ஆமாம், அண்ணா இவங்கதான் கூட்டிட்டு போய் இப்படி பண்ணாங்க’ என்று சொன்னேன். ‘உனக்கு ம்யூசிக் பற்றி என்னடா தெரியும்? கிட்டார் தூக்கிக்கிட்டு ஓடு’ என்று விரட்டி அடித்தார். நானும் உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.
அதன் பிறகு அண்ணாவின் குரு ஜி கே வெங்கடேசன் வந்து, ‘நீ தனியா மியூசிக் பண்ண போனப்ப என் குரூப்பை விட்டு விலக்கினேனா’ என்று கேட்டார். அவன் இல்லை என்றார். ‘அந்த படத்திற்கு வேறு யாராவது மியூசிக் பண்ண போறாங்க. அதற்கு அவன் பண்ணா என்ன’ என்று கேட்டவுடன் தான் அண்ணா ஒப்புக்கொண்டார். அதன்பிறகு அந்த படத்திற்கு நான் இசையமைத்தேன். படமும் நன்றாக ஓடி வெற்றி அடைந்தது” என்று கூறினார்.