‘நஷ்ட ஈட்டை கொடுப்பேனா’ என்று சிம்புவும், ‘வாங்காமல் விட்டிருவேனா’ என்று மைக்கேல் ராயப்பனும் விடாக்கொண்டன்; கொடாக்கண்டனாக தங்களுடைய மோதலைக் கை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதில் பாதிக்கப்படுவது என்னமோ.. சிம்புவை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள்தான்.
“அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஈடுகட்டும் பொருட்டு 8.50 கோடி ரூபாயை சிம்பு கொடுக்கத்தான் வேண்டும்” என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பன் கிடுக்கிப்பிடி போட்டுக் கொண்டிருக்கிறார். சிம்புவோ நழுவிக் கொண்டேயிருக்கிறார்.
சமீபத்தில் வெளியான சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் வெளியீ்ட்டீன்போதுகூட இந்தப் பிரச்சினை எழுந்து கடைசியாக விநியோகஸ்தர்கள் தலையிட்டு “இந்தப் படத்தில் எதுவும் வேண்டாம். அடுத்தப் படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக பேசித் தீர்த்துக் கொள்வோம்…” என்று சொன்னதால் தப்பித்தது அந்தப் படம்.
இதோ இப்போது ‘மாநாடு’ படத்துக்கு குடைச்சலைத் துவக்கிவிட்டார் மைக்கேல் ராயப்பன்.
‘மாநாடு’ படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு வரும் 6-ம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்காக படப்பிடிப்புத் தளங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், ‘இந்தப் படப்பிடிப்பு நடத்தக் கூடாது’ என்று பெப்சி அமைப்பு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறதாம்.
‘பெப்சி’ அமைப்புக்கு இந்த நோட்டீஸை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள்தான் பார்வர்டு செய்திருக்கிறார்கள். ‘தங்களுடைய சங்க உறுப்பினரின் கடனுக்கு வழி சொல்லாமல் ‘மாநாடு’ படத்தின் ஷூட்டிங் நடத்தப்படக் கூடாது’ என்பது அவர்களது கருத்து.
‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் பொறுப்பில் உள்ளார் என்பதால் அந்தச் சங்கத்தினர் இதற்காக சுரேஷுக்கு பக்க பலமாக களமிறங்கியிருக்கிறார்கள்.
வரும் 3-ம் தேதியன்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம் என்று மூன்று தரப்பு சங்கத்தினரும் அமர்ந்து இதற்கான பேச்சுவார்த்தையை நடத்தப் போகிறார்களாம்.
கடைசியாக பேசும்போது சிம்பு “நஷ்ட ஈடாக பணம் தருகிறேன்…” என்றுதான் சொல்லியிருக்கிறார். ஆனால், எவ்வளவு என்பதை மட்டும் சொல்லவில்லையாம். “அந்தத் தொகை எவ்வளவு என்பதை முடிவு செய்து, அவரிடத்தில் இருந்து பாதிக்கப்பட்ட தயாரிப்பாளருக்கு வாங்கிக் கொடுப்போம்…” என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சொல்லியிருக்கிறார்கள்.
இதில் கொசுறாக.. நடிகர் சிம்புவின் சார்பில் நடிகர் சங்கத்தின் பிரதிநிதியாக அந்தச் சங்கத்தின் முன்னாள் தலைவரான சரத்குமாரை இந்தப் பஞ்சாயத்தில் கலந்து கொள்ள வருமாறு உஷா ராஜேந்தர் அழைத்திருக்கிறாராம். சரத்குமாரும் இதில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபடியும் முதல்ல இருந்தா…?????????
இதுக்கு ஒரு எண்ட் கார்டு யாராச்சும் போட்டு விடுங்கப்பா..!!!