1980களில், மனோரமா, கோவை சரளா போன்ற நடிகைகளின் வரிசையில் காமெடியில் அதிக கவனம் பெற்றவர் நடிகை பிந்து கோஷ். பல முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட நூறு திரைப்படங்களுக்கு மேல் நடித்து இருக்கும் அவர், தற்போது 76 வயதாகியுள்ளார். வயது மூப்பு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தார்.

தற்போது, உடலில் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் இருந்த நிலையில், மருத்துவ செலவுகளும், உணவுச் செலவுகளும் நிறைவேற்ற முடியாத அவஸ்தையில் இருந்ததாக அவர் பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார். அவரது நிலையை அறிந்து, நடிகர் விஷால், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் கேபிஒய் பாலா, நடிகை ஷகீலா உள்ளிட்ட பலரும் அவருக்கு உதவி செய்தனர்.
இந்த நிலையில், நேற்று அவர் உடல்நலக் குறைவால் காலமானார். இந்த செய்தியை அவரது மகன்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில், அவர் நினைவஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளார்.