பீகாரில் அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வின் மதிப்பெண் பட்டியலில் மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம் பெற்றிருப்பது அனைவரையும் அதிர்ச்சியாக்கியிருக்கிறது.
பீகாரில் அண்மையில் செகண்ட்டரி கிரேடு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் ரிஷிகேஷ் குமார் என்பவரும் கலந்து கொண்டு தேர்வு எழுதியிருக்கிறார்.
அவருக்குக் கொடுக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழில் ரிஷிகேஷின் புகைப்படத்திற்குப் பதிலாக நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படத்தை ஒட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் மலையாளத்தின் மிகப் பெரிய ஹிட்டடித்த ‘பிரேமம்’ படத்தில் அறிமுகமானவர். தமிழ், மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளிலும் தற்போது நடித்து வருகிறார்.
இவருடைய புகைப்படம் பீகாரில் நடைபெற்ற தேர்வில் இடம் பெற்றது எப்படி என்றுதான் தெரியவில்லை.
ஏற்கெனவே பீகார் மாநிலம் கல்வியில் மிகவும் பின் தங்கிய மாநிலம். தேர்வுகளில் பிட் அடிப்பது மிக, மிக எளிது என்பதால் அந்த மாநிலத்தின் கல்வித் திறன் மிகவும் குறைவாக உள்ளது.
இந்த நேரத்தில் மொத்தக் கல்வித் துறையையும் கேலி செய்வதுபோல இந்தச் சம்பவம் நடந்திருப்பதால் பீகாரில் எதிர்க்கட்சிகள் முதல்வரையும், கல்வி அமைச்சரையும் கிண்டல் செய்து கொண்டிருக்கின்றனர்.
இது குறித்துப் பேசிய பீகார் மாநில கல்வித் துறையின் செயலாளரான சஞ்சய் குமார், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். இந்தத் தவறு எப்படி நடந்தது என்பதை விரைவில் கண்டறிவோம்..” என்று சொல்லியுள்ளார்.