Friday, November 22, 2024

என் பெயர் ஆனந்தன் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சில படங்களின் திரை மொழி விமர்சனங்களுக்கு உட்பட்டு இருந்தாலும் அப்படங்கள் பேசியிருக்கும் கருத்தும், கதையும் விமர்சனங்களுக்கு அப்பார்ப்பட்டதாக இருக்கும். கிட்டத்தட்ட ‘என் பெயர் ஆனந்தன்’ படமும் அப்படியான ஒன்று. எடுத்துக் கொண்ட கதையும், களமும் மிகவும் கனமானது.

இயல், இசை, நாடகம் என்ற நம் தமிழ் மரபுக் கலைகளில் கூத்துக் கலை மிகவும் முக்கியமானது. அதை உரக்கப் பேசிய தமிழ் சினிமாக்கள் பெரிதாக எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை.

அந்த உண்மை ஏற்படுத்தி இருக்கும் கோபத்தை ஆதங்கத்தைத்தான் என் பெயர் ஆனந்தன்’ என்ற பெயரில் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் ஸ்ரீதர் வெங்கடேசன். படத்தின் தயாரிப்பாளரும் அவரே.

கமர்சியல் சமரசங்கள் அற்ற இப்படத்தின் கதை இதுதான்…

படத்தின் நாயகன் சந்தோஷ் ஒரு குறும்பட இயக்குநர். அவர் இயக்கிய அடிமை சுதந்திரம்’ என்ற குறும்படம் கேன்ஸ் திரைப்பட விருதுவரை செல்கிறது. (நிஜமாகவே படத்தில் வரும் அக்குறும்படம் அழகாக இருக்கிறது) அந்த வெளிச்சமே அவருக்கான வெள்ளித்திரை பட வாய்ப்பைப் பெற்றுத் தருகிறது.

அந்தச் சந்தோசமும், மனைவி அதுல்யா கர்ப்பமாக இருக்கும் சந்தோஷமும் சந்தோஷுக்கு சேர்ந்து கிடைக்க..ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு உற்சாகமாக கிளம்புகிறார். இங்குதான் ட்விஸ்ட்..

படப்பிடிப்புக்குக் கிளம்பி வரும் ஹீரோவை சிலர் பாதி வழியிலே கடத்திச் செல்கிறார்கள்.  அங்கு ஒருவர் நாற்காலியில் ஹீரோவை கட்டி வைத்து சினிமா பற்றிய விசயங்களைப் பேசுகிறார்.

அவர் ஏன் தற்காலச் சினிமாவைப் பற்றிப் பேசுகிறார். அதுவும் கடத்தி வைத்துக் கொண்டு..!? மேலும் கூடவே குண்டாக ஒரு நண்பரையும் வைத்திருக்கிறார். அவர் அவ்வப்போது நடிகர்களின் கெட்டப்களில் வந்து ஹீரோவைப் போலவே நம்மையும் மிரட்டுகிறார். அது ஏன்..?

முடிவில் ஹீரோ சந்தோஷ் அங்கிருந்து தப்பித்தாரா.. இல்லையா..? முடிவில் படம் சொல்லும் நீதி என்ன..? இதுதான் இப்படத்தின் கதை.

படத்தில் ஹீரோவாக நடித்துள்ள சந்தோஷ் ஒரு நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார். குறிப்பாக  ஷுட்டிங் இருக்கும் நிலையில் கடத்தி வரப்பட்டதால் அவர் பரிதவிப்பது மிகவும் இயல்பாக இருக்கிறது.

நாயகி அதுல்யாவிற்குப் பெரிதாக வேலைவெட்டி எதுவும் எல்லை. தேமே என்று வந்து போகிறார். படத்தில் திடீர் என ட்விஸ்ட் வைக்கும் அந்த உதவி இயக்குநர் கேரக்டரில் நடித்துள்ள இளைஞர் மிக நன்றாக நடித்துள்ளார்.

மேலும், முகத்தைக் காட்டாமலேயே மணி கெய்ஸ்ட் வெப் சீரீஸ் கும்பல் போல ஒரு முகமூடியைக் கொண்டு வரும் அந்த வில்லன் கேரக்டரும் நல்ல ஷார்ப்.

மிக முக்கியமாய் முன் பாதியில் எல்லாம் நம்மை காண்டு ஏத்தும் அந்த குண்டு இளைஞர் பின்பாதியில் ஒரு அசத்து அசத்திவிடுகிறார். இப்படி நடிகர்களில் யாரும் பெரிதாக குறை வைக்கவில்லை.

புரொடக்‌ஷன் கொடுத்த கேமரா உள்ளிட்ட ஒளிப்பதிவு கருவிகளைக் கொண்டு தன்னால் எவ்வளவு சிறப்பைச் செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பைச் செய்துள்ளார் ஒளிப்பதிவாளர்  விக்னேஷ்.  படத் தொகுப்பாளர் விஜய் ஆண்ட்ருஸ் இன்னும்கூட தன் கத்தரிக்கு வேலை கொடுத்திருக்கலாம். ஜோஸ் ப்ராங்க்ளினின் பின்னணி இசை பாடல்கள் இரண்டுமே அருமை. அதுவும் பின்பாதியில் வரும் அந்தக் கூத்துப் பாட்டு அருமை.. அருமை.

தங்கள் இஷ்டத்திற்கு பல  கூத்துக்களை படமாக எடுக்கும் இயக்குநர்கள் நம் தாய் மண்ணின் பெருமையான கூத்துக் கலையை படமாக எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார் இயக்குநர்.

அதை ஒரு செழித்தத் திரைக்கதையாக மாற்ற சிரமப்பட்டிருந்தாலும் இந்த முயற்சி பாரட்டத்தக்கதுதான்.

- Advertisement -

Read more

Local News