தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் நடித்த ‘லூசிபர்’ திரைப்படம், 2019-ம் ஆண்டு பிருத்விராஜ் இயக்கத்தில் வெளியானது. இந்த படம் மூலம் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமானார். தற்போது, ‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘எல் 2 எம்புரான்’ தயாராகியுள்ளது. இந்த திரைப்படத்தில் மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தில், டோவினோ தாமஸ் ‘ஜதின் ராமதாஸ்’, பிருத்விராஜ் ‘சையத் மசூத்’, மோகன்லால் ‘குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி’ ஆகிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய பொருளழிப்பு செலவில் உருவாகிய இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.
‘எல் 2 எம்புரான்’ படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இந்த படம் வரும் 27ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியிடப்பட உள்ளது. இதற்கான விளம்பரப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகும் முதல் மலையாளப் படமாக இது அமைந்துள்ளதால், ரசிகர்களின் ஆர்வம் கூடுதலாக உள்ளது. மோகன்லால் நடித்து வந்த படங்களில் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படமாகவும் இதுவே கருதப்படுகிறது.இந்நிலையில், முன்பதிவு தொடங்கியபோது, திரிசூர் பகுதியில் மோகன்லால் ரசிகர்கள் டிக்கெட் வாங்க கூட்டமாக வந்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.