Thursday, April 11, 2024

DR-56 – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹரிஹரா பிக்சர்ஸ் பட நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி தயாரித்ததுடன் நாயகனாகவும் நடித்திருக்கிறார் பிரவீன் ரெடி. நாயகியாக பிரியாமணி நடித்துள்ளார். மேலும் தீபக் ஷெட்டி, ரமேஷ் பட், யெத்திராஜ், கிரீஷ் ஜாட்டி, வீணா பொன்னப்பா, ஸ்வாதி, மஞ்சுநாத் ஹெக்டே, பிரசாத், மானு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கன்னட படமாகத் தயாரிக்கப்பட்டு தமிழ்  தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

நகரில் புகழ் பெற்ற மூளை நரம்பியல் நிபுணரான ஒரு மருத்துவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார். இவரின் சடலம் கிடந்த இடத்தருகே குடியிருந்த இன்னொரு மருத்துவரும் அடுத்த நாள் கொலையாகிறார். இப்படி சங்கிலித் தொடராக நடக்கும் இந்தக் கொலை வழக்கு சி.பி.ஐ. வசம் வருகிறது.

சி.பி.ஐ.-யில் அதிகாரியாக இருக்கும் பிரியாமணி இந்தக் கொலை வழக்கை விசாரிக்க வருகிறார். கொலை செய்யப்பட்ட மருத்துவர்களிடையே இருக்கும் ஒற்றுமையைக் கண்டறிகிறார்.

தனது முகத்தில் ஒரு பக்கம் முழுவதும் எரிந்த கோரமான நிலையில் இருக்கும் கதையின் நாயகன்தான் இந்தக் கொலைகளை செய்தாரா என்ற சந்தேகம் சி.பி.ஐ.-க்கு வருகிறது. நாயகனோ, 56 நிமிடங்களுக்கு ஒரு மாத்திரை சாப்பிட்டால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற சூழலில் தனது வாழ் நாளை எண்ணிக் கொண்டிருப்பவர்.

இவர் கைது செய்யப்படும் சூழலில் மற்றொரு மருத்துவரும் கொலை செய்யப்படுகிறார். இறுதியில் மருத்துவர்களை கொலை செய்து வரும் அந்த மர்ம நபர் யார்.? எதனால் இந்தக் கொலைகள் நடைபெறுகிறது..? என்பதுதான் மீதிக் கதை.

சி.பி.ஐ. அதிகாரியாக மிடுக்கான உடையில், ஸ்டைலாக நடந்து கொண்டேயிருக்கிறார் பிரியாமணி. அவர் கண்டுபிடிப்பதெல்லாம் விசாரணையின் அடு்த்தக் கட்டமாக போய்க் கொண்டேயிருக்கிறது. நடிப்பென்று பார்த்தால் பெரிதாக ஏதுமில்லை என்பதுதான் உண்மை.

நாயகனாக நடித்திருக்கும் பிரவீன் தனது முகத்தில் கோரமான மேக்கப்பை போட்டுக் கொண்டு பரிதாப உணர்வை வரவழைக்கும் அளவுக்கு நடித்திருக்கிறார். பிணமாக அவர் நடித்திருக்கும் அந்த 4 நிமிடக் காட்சிக்காகத் தனி பாராட்டு அவருக்கு..!

மற்றக் கதாப்பாத்திரங்களில் நடித்தவர்கள் இயக்குநர் சொன்னதை செய்திருக்கிறார்கள். பிரவீனின் அப்பாவின் அந்த கடைசி நிமிட நடிப்பு ஓகேதான்.

ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். நோபின் பாலின் இசையில் பாடல்கள் ஓகே ரகம்தான். கிளைமாக்ஸ் சோகப் பாடலும், அதன் காட்சிகளும் கொஞ்சமாய் நம் மனதைத் தொடுகின்றன. பின்னணி இசை பெரிதான கவனத்தைக் கொடுக்கவில்லை. ஆனால் சிறப்புப் பணியாக பூட்ஸ் சப்தத்தை மட்டும் சத்தமாய் கொடுத்து பணி நிறைவு செய்திருக்கிறார் சவுண்ட் என்ஜீனியர்.

பரபரப்பை ஏற்படுத்தும் அளவுக்கான கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் அதைச் சொல்லியவிதத்தில்தான் நம்மை ஏமாற்றியிருக்கிறார். அடுத்து என்ன என்பதைத் தூண்டிவிடும் அளவுக்கான திரைக்கதையை ரசிகர்களுக்குக் கொடுக்கத் தவறிவிட்டார் இயக்குநர். கன்னட படம் என்பதால் டப்பிங்கில் பல இடங்களில் வசனங்கள் ஸ்லிப் ஆகிறது. மேலும் தோற்றத்திற்கும், குரலுக்கும் ஒவ்வாதவகையில் டப்பிங் வாய்ஸை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

சி.பி.ஐ.யில் என்ன பதவியில் இருக்கிறார் பிரியாமணி என்பதுகூட சொல்லப்படவில்லை. ஒரேயொரு கொலையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கிறார்கள் என்றால் அதற்கான வலுவான காரணம் இருந்திருக்க வேண்டும். அதுவும் இங்கே சொல்லப்படவில்லை. எல்லாவற்றையும் தாண்டி இயக்கம் என்பது ரசிகனை மதிமயங்க வைப்பது. அது இந்தப் படத்தில் மிக, மிக குறைவு என்பதால் படத்தை ரசிக்க முடியாத நிலைமையாகிவிட்டது.

Dr 56 – மருந்து கெட்டுப் போச்சுங்க இயக்குநரே..!

RATING : 2.5 / 5

- Advertisement -

Read more

Local News